இந்தியா

மகாத்மா காந்தியின் உருவ பொம்மையைச் சுட்டு, தீ வைத்த இந்து மகாசபா தலைவர் உள்பட 13 பேர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

மகாத்மா காந்தியின் உருவ பொம்மையைச் சுட்டு, தீ வைத்துக் கொளுத்திய இந்து மகாசா அமைப்பின் தலைவர் உள்பட 13 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில் இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தியை அவமதிப்பு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. மகாத்மா காந்தி கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி நாதுராம் கோட்சோவால் டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விசாரணைக்குப் பின் நாதுராம் கோட்சே கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

இந்நிலையில் காந்தியின் 71-வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த சூழலில் அலிகர் நகரில் இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த பூஜா சகுண் பாண்டே என்ற பெண் தலைவர் தலைமையில் சிலர் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை வைத்து அதில் , துப்பாக்கி(ஏர்கன்) சுட்டனர்.

அந்த உருவ பொம்மையில் வைக்கப்பட்டிருந்த சிவப்பான திரவம் ரத்தம் போல் வழிந்து ஓடியவுடன், அந்த உருவ பொம்மை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார்கள். இதை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். சுடும்போது நாதுராம் கோட்சே வாழ்க என்று இந்தியில் முழக்கமிட்டனர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து அலிகார் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆகாஷ் குல்ஹாரி கூறுகையில்," மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஆனால், இந்து மகாசபா அமைப்பினர் சிலர் காந்தியின் உருவ பொம்மையை ஏர்கன் துப்பாக்கியால் சுட்டு, அதை தீ வைத்தனர்.

இந்தக் காட்சி வீடியாவாக சமூக ஊடகங்களில் வந்ததையடுத்து, அந்த 13 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்து மகாசபா பெண் தலைவர் பூஜா சகுண் பாண்டே துப்பாக்கியால் சுட்டார் என்பது தெரியவந்தது. மேலும், இனிப்புகளையும் வழங்கியுள்ளார். யாரையும் இதுவரை கைது செய்யவில்லை " எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT