இந்தியா

மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 15 பேர்; 32 நாட்களுக்குப் பின் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

பிடிஐ

மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 15 தொழிலாளர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தை நிலப்பரப்புக்கு கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மேகாலயா மாநிலத்தில் கிழக்கு ஜாய்ன்டியா மலைத்தொடரில் பாயும் லைட்டின் ஆற்றின் அருகே உள்ள மூக்னூர் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் கடந்த மாதம் டிசம்பர் 13-ம் தேதி 15 பேர் சிக்கிக் கொண்டனர்.

இங்குள்ள சுரங்கம் அகன்று இல்லாமல் குறுகலாக மிக ஆழமாக அமைந்துள்ளதால் இதனை  எலிப்பொறி சுரங்கம் என அழைக்கின்றனர். இந்நிலையில் 32 நாட்களுக்குப் பிறகு இன்று (ஜனவரி 17) மேகாலயா சுரங்கத்தில் சிக்கியவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் சடலத்தைக் கண்டெடுத்தனர்.

எலிப்பொறி சுரங்கத்தின் வாய்ப்பகுதியில் சடலம் சிக்கியிருந்ததாகவும் அந்த சடலத்தை வெளியே எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் மற்றவர்களின் நிலை என்னவென்பது இதுவரை தெரியவில்லை. தொழிலாளர்களின் உறவினர்களோ சுரங்கத்தினுள் இன்னும் தொழிலாளர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. அவர்களின் சடலத்தையாவது மீட்டுத் தாருங்கள் என்று வேண்டியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "210 அடி ஆழம் கொண்ட எலிப்பொறி சுரங்கத்தினுள் சுமார் 60 அடி ஆழத்தில் ஒரு தொழிலாளியின் சடலத்தை கடற்படை மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT