சத்தீஸ்கரில் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர், "வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதிப்படுத்தப்படும்" என வாக்குறுதி அளித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, அனைத்து இந்தியர்களின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இன்று வரை அது நிறைவேறவில்லை.
தற்போது, நாட்டில் உள்ள ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் அளிப்பதாக ராகுல் காந்தி கூறுகிறார். இதுவும், மோடியின் வாக்குறுதியை போல பொய் வாக்குறுதிதானா? மக்களிடம் பொய்யான வாக்குறுதி அளிப்பதில் மோடிக்கு நிகரானவர் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். இவ்வாறு மாயாவதி கூறினார்.