இந்தியா

சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையர்களை எதிர்த்தார்; நாம் திருடர்களை எதிர்க்க வேண்டியுள்ளது: ஹர்திக் படேல் காட்டம்

ஏஎன்ஐ

"சுபாஷ் சந்திரபோஸ் தேச சுதந்திரத்துக்காக பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தார், நாம் திருடர்களை எதிர்க்க வேண்டியுள்ளது" எனப் பேசினார் ஹர்திக் படேல்.

மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் யுனைடட் இந்தியா என்ற தலைப்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது.

இதில் பேசிய ஹர்திக் படேல், "நாம் அனைவரும் இங்கு தேசத்தையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்காக ஒன்று கூடியுள்ளோம். அன்று சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடினார். இன்று நாம் அனைவரும் திருடர்களுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது.
மம்தா பானர்ஜி பாஜகவை எதிர்க்கும் அனைத்து கட்சித் தலைவர்களையும் லட்சோப லட்ச மக்களையும் ஒன்றிணைத்துள்ளார். இது பெருமைக்கும் பாராட்டுக்கும் உரிய செயல். இங்கே குழுமியிருக்கும் கூட்டம் பாஜக தனது ஆட்சி அதிகாரத்தை இழந்துகொண்டிருப்பதற்கான அடையாளம்" என்றார்.

குஜராத் மாநிலத்தில் 2015-ம் ஆண்டு படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி இந்திய அரசியலில் கவனம் ஈர்த்தவர் ஹர்திக் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT