இந்தியா

‘‘இது தேர்தலுக்கு முந்தைய அரசியல்’’ - குற்றப்பத்திரிகை தாக்கல் குறித்து கண்ணய்யா குமார் விமர்சனம்

செய்திப்பிரிவு

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தேசத்துரோக வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கண்ணய்யா குமார் விமர்சித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில், நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது தொடர்பான விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில், இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமார், மாணவர்கள் உமர், அனிர்பன் ஆகியோர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கண்ணய்யா குமார் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் 1,200 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் இன்று தாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து கண்ணய்யா குமார் கூறுகையில் ‘‘3 ஆண்டுகளுக்குப்பின் எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்காக போலீசாருக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்தே இதில் அரசியல் நோக்கம் இருப்பது தெளிவாக புரிகிறது. நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT