இந்தியா

காவிரி இறுதி தீர்ப்புக்கு மேகேதாட்டு திட்டம் எதிரானது: உச்ச நீதிமன்றத்தில் த‌மிழக அரசு பதில் மனு

செய்திப்பிரிவு

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு தடை கோரி தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இவ்வழக்கில் மத்திய அரசும், கர்நாடக அரசும், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு பதில் மனு தாக்கல் செய்தன. இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தில் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்னி லையில் மேகேதாட்டு வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், மத்திய அரசுக் கும் அவகாசம் அளிக்கப்ப‌ட்டது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் மாலையே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி கர்நாடக அரசு தாக்கல் செய்த முதல்கட்ட திட்ட அறிக்கையின்படி, மேகேதாட்டு அணையின் கொள்ளளவு 67.16 அடி எனவும், அதில் 27.64 அடி நீர் ஜூன் முதல் அக்டோபர் வரை பயன்படுத்தப்படும் எனவும் குறிப் பிட‌ப்பட்டுள்ளது. அதில் நீர்ப்பாச னம் தொடர்பான தகவல்கள் முழுமையாக தெரிவிக்கப்பட வில்லை. அதே வேளையில் நீரைப் பயன்படுத்தும் காலத்தை பார்க்கும் போது, அந்த நீர் பாசனத்துக் காகவே பயன்படுத்தப்பட இருப் பது தெளிவாகிறது. இதனால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரும் கர்நாடகாவின் பதில் மனுவை ஏற்க முடியாது. காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய‌ இறுதி தீர்ப்பில் ஆற்றின் குறுக்கே தமிழகத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணை கட்டக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் மேகேதாட்டு அணை திட்டம் காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என தெரியவருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT