வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை. தங்களின் பிரதிநிதிகளை தேர்வு செய்ய ஒருவர் வாக்களிக்கத் தவறினால் வருத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி இளைஞர்களுக்கு அறிவுரை தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன்கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறியதாவது-
ஒவ்வொரு தேர்தலையும் வெற்றிகரமாகவும், அமைதியாகவும் தேர்தல் ஆணையம் திறமையாக நடத்தி வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் 21-ம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்கள் முதல் முறையாக தங்கள் வாக்குகளை பதிவு செய்ய காத்திருக்கிறார்கள். நாட்டுக்காக பல்வேறு பொறுப்புகளை சுமக்க வாய்ப்புக்களுக்காக காத்திருக்கிறார்கள். தேசத்தை கட்டமைக்கும் பயணத்தை தொடங்கிவிட்டார்கள். ஒவ்வொருவரின் கனவும், தேசத்தின் கனவும் நனவாகும் காலம் வந்துவிட்டது.
வாக்களிக்கும் வயதை எட்டிய இளைஞர்கள் வரும் தேர்தலில் தங்களின் ஜனநாயகக் கடமையான வாக்களிப்பதை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் ஒரு வாக்காளர் என்பதை உணர்ந்து, வாக்களிக்கும் உரிமை, முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது என்பது நமது புனிதமான கடமை, அதுநமக்குள் இயற்கையாக வளர வேண்டும்.எந்த காரணத்தைக் கொண்டும் ஒருவர் வாக்களிக்க முடியாவிட்டால், அது அவருக்கு வலியைத் தர வேண்டும்.
நாட்டில் எந்தவிதமான தவறுகள் நடந்தாலும், வாக்களிக்க முடியாதவர்கள் அதற்கு கண்டிப்பாக வருத்தப்பட வேண்டும். நான் வாக்களிக்கவில்லை, தேர்தல் நாளில் நான் வாக்களிக்கும் இடத்துக்கு செல்லவில்லை என்று தெரிவித்தால், அதன் விளைவு நம்முடைய நாடுதான் பாதிப்படையும்.
மக்கள் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன். நாட்டில் மிகச்சிறந்த ஆளுமை உடையவர்கள், பிரபலமானவர்கள் தாமாக முன்வந்து மக்களுக்கு வாக்களிக்கும் கடமை குறித்தும், வாக்காளராக பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
வாக்களிக்க தகுதியுள்ள அனைத்து இளம் வாக்காளர்களும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வார்கள் என உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய ஜனநாயகம் மேலும் வலுவடையும். நம் தேசத்தில் ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தல் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய வியப்பாக இருக்கிறது. தேர்தலை வெற்றிகரமாகவும், நேர்மையாகவும், நடத்தும் தேர்தல் ஆணையத்தின் திறமையை நினைத்து ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்பட வேண்டும். இந்த நாடு தகுதிவாய்ந்த ஒவ்வொருவருக்கும் தேர்தலில் வாக்களிக்க உரிமை வழங்குகிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.
மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள் நமது இஸ்ரோஏவிய ராக்கெட் மூலம் விண்வெளியை அடைந்திருக்கிறது. கடந்த 24-ம் தேதி கலாம் சாட் எனும் சிறிய செயற்கைக்கோள் மாணவர்களால் உருவாக்கப்பட்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி மகாத்மா காந்தி நினைவுநாள் அன்று அனைவரும் தங்கள் நினைவஞ்சலியை செலுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.