இந்தியா

ராஜினாமா செய்கிறார் மத்திய அமைச்சர் அனந்த் கீதே: சிவசேனா - பாஜக கூட்டணி முறிவால் முடிவு

செய்திப்பிரிவு

மத்திய கனரக தொழில் மற்றும் பொதுத்துறை அமைச்சர் அனந்த் கீதே தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

இது குறித்து சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறும்போது, ''பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த பின் அவரிடம் அனந்த் கீதே தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார்” என்றார்.

முன்னதாக, மகாராஷ்டிர நவநிர்மாண்சேனா தலைவர் ராஜ் தாக்கரே, “பாஜகவிடம் அவமானப்பட்ட பிறகும், சிவசேனா மத்திய அமைச்சரவையில் தொடர்கிறது” என பிரச்சாரத்தின்போது விமர்சித்திருந்தார். இதையடுத்தே, உத்தவ் தாக்கரே மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியாக சிவசேனா இருந்தது. தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியே நடக்கும் என பாஜகவின் அப்போதைய தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித் தார்.இதனால், ராய்கர் தொகுதி யில் தொடர்ந்து ஆறாவது முறை எம்.பி.யாக இருக்கும் சிவசேனாவின் அனந்த் கீதே கனரக தொழில் மற்றும் பொதுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

கூட்டணி முறிவு

வரும் அக்டோபர் 15-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, பாஜக- சிவசேனா இடையே இருந்த 25 ஆண்டுகால கூட்டணி முறிந்தது. இவ்விரு கட்சிகளுமே அங்கு தனித்து போட்டியிடுகின்றன. கூட்டணி முறிந்ததையடுத்து அனந்த் கீதே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார்.

SCROLL FOR NEXT