உ.பி.யில் விவசாயிகளின் விளையும் பயிர்களை பசுமாடுகள் மேய்ந்து விடுவதாக பாஜக உறுப்பினர் புகார் தெரிவித்தார். இதை அவர் நேற்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பி இருந்தார்.
இது குறித்து உ.பி.யின் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள பாந்தா தொகுதியின் பாஜக எம்.பி.யான பைரோன் பிரசாத் மிஸ்ரா பேசும்போது, ''தம் விளைபயிர்களை மேய்ந்துவிடும் பசுமாடுகளால் உ.பி. விவசாயிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், பயிர்களுக்கான விலையை இருமடங்காக்கும் மத்திய அரசின் யோசனைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
தற்போது விளைந்துள்ள ராபி பயிர்களை பசுமாடுகளிடம் இருந்து காக்கவும் மிஸ்ரா யோசனை அளித்தார். அதில், தனது தொகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்களை தற்காலிகமாக பசுமாடுகளின் காப்பகமாக மாற்ற வலியுறுத்தினார்.
இது குறித்து மிஸ்ரா தொடர்ந்து கூறுகையில், ''இந்தப் பிரச்சினையில் தங்களை காத்துக்கொள்ள விவசாயிகளே களம் இறங்கி வருகின்றனர். இவர்கள் பசுமாடுகளை பிடித்து தம் பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களில் அடைத்து விடுகின்றனர். இதனால், சரியான தீனி இன்றி பசுமாடுகள் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
இதே பிரச்சினை இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இருப்பதாக மற்றொரு பாஜக எம்.பி.யான அனுராக்சிங் தாக்கூரும் எழுப்பியிருந்தார். அதில் அவர், ''பசுமாடுகளிடம் இருந்து பயிர்களைக் காக்க அதற்கு எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் வேலி அமைக்க அனுமதிக்க வேண்டும்'' என மத்திய அரசிடம் கோரினார்.
தனது மாநிலத்திலும் இந்தப் பிரச்சினை இருப்பதாக ம.பி.யின் பாஜக உறுப்பினரான ஜனார்த்ன மிஸ்ராவும் தெரிவித்தார். இதற்காக மத்திய அரசு, பசுமாடுகள் மேயும் பயிர்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்புத் தொகை அளிக்க உத்தரவிடும்படி யோசனை தெரிவித்தார்.