மக்களவைத் தேர்தல் அட்டவணை என்ற பெயரில் சமூக வலைதளங்களில் உலா வந்த செய்தி குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு டெல்லி போலீஸுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவிய செய்தியில் ஏப்ரல் 7-ல் மக்களவைத் தேர்தல் தொடங்கும். மே 17 வரை தேர்தல் நடைபெறும் எனக் குறிப்பிட்டதோடு எந்தெந்த மாநிலங்களில் எப்போது தேர்தல் என்ற விவரமும் இடம்பெற்றது.
அட்டவணையுடன் வெளியான அந்தச் செய்தி மிக வேகமாக வைரலான நிலையில் இதனைத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதில், "போலியாகச் செய்திகளை வெளியிட்ட நபரையோ அல்லது நிறுவனத்தையோ கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதிகாரிகளுக்கு வலியுறுத்தியிருந்தது.
இதனையடுத்து சரண்ஜித் சிங் என்ற தேர்தல் ஆணைய அதிகாரி டெல்லி போலீஸ் கமிஷனருக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "மக்களவைத் தேர்தல் தேதி என்ற பெயரில் போலியான செய்திகள் பரவி மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கெடுசெயல். இதனைப் பரப்பியது யார் என்று கண்டறிய வேண்டும்" என்று தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.