மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளாகச் சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில் வரும் மக்களவைத் தேர்தல், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய தேர்தலும் விரைவில் நடத்தப்பட உள்ளதைச் சுட்டிக்காட்டி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
16ஆவது மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதேபோல், ஆந்திர மாநில சட்டப்பேரவை ஜூன் 18, அருணாசலப் பிரதேச சட்டப்பேரவை ஜூன் 1, ஒடிசா சட்டப்பேரவை ஜூன் 11, சிக்கிம் மே 27 ஆகிய தேதிகளில் நிறைவடையவுள்ளன
தேர்தல் தொடர்பான பணிகளில் ஏராளமான அதிகாரிகள் ஈடுபடுவார்கள், ஆதலால், அதிகாரிகளை அதிக அளவில் இடமாற்றம் செய்ய விரும்பவில்லை. அதேசமயம் சொந்த மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகளாகப் பணிபுரியும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும்போது இதுபோன்று தேர்தல் ஆணையம் உத்தரவுகளைப் பிறப்பிப்பது இயற்கையானது. அதிகாரிகள் தேர்தல் சம்பந்தமான நடவடிக்கையில் தலையிடக்கூடாது என்பதற்காகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.
மேலும், கடந்த 16ஆம் தேதியும் தேர்தல் ஆணையம் ஓர் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், கடந்த காலங்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்குகளைச் சந்தித்து வரும் அதிகாரிகளைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.