இந்தியா

நடிகை என்பதால் மைத்ரியிடம் பழகினேன்: மத்திய அமைச்சர் மகன் கார்த்திக் கவுடா வாக்குமூலம்

இரா.வினோத்

திரைப்பட நடிகை என்பதால் மைத்ரியுடன் சில மாதங்கள் நண்பராக பழகினேன் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா வெள்ளிக்கிழமை பெங்களூர் போலீஸார் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

கார்த்திக் கவுடா தன்னை ரகசிய திருமணம் செய்து, ஏமாற்றி பாலி யல் பலாத்காரம் செய்துவிட்டார் என நடிகை மைத்ரி கவுடா ஆர்.டி.நகர் போலீஸாரிடம் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி புகார் அளித் தார். இதையடுத்து, கார்த்திக் மீது பாலியல் பலாத்காரம், மோசடி, தடயங்களை அழிக்க முயற்சித்தது என 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கார்த்திக் கவுடாவை கைது செய்ய போலீஸார் தேடிவந்த நிலையில், அவருக்கு கடந்த 8-ம் தேதி நீதிமன் றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ரகசிய விசாரணை

இந்நிலையில், கார்த்திக் கவுடா யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 6.15 மணிக்கு பெங்களூர் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் பெங்களூர் மாநகர காவல் துறை துணை ஆணையர் ஓம் பிரகாஷ் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அதன்பிறகு கார்த்திக் கவு டாவை பெங்களூர் அம்பேத்கர் மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பரிசோதனையின் போது அவருடைய ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதிக்கப்பட்டது. அடுத்த ஓரிரு நாட்களில் அவரிடம் மடிவாளா தடயவியல் ஆய்வகத்தில் குரல் பரிசோதனை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

80 கேள்விகளுக்கும் ஒரே பதில்

இந்நிலையில், கார்த்திக் கவுடாவிடம் எத்தகைய விசாரணை நடைபெற்றது என ஆர்.டி.நகர் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, “மைத்ரியுடனான உறவு, காதல், ரகசிய திருமணம், பாலியல் பலாத்காரம், தொலைபேசியில் உரையாடியது, புகைப்பட மற்றும் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் குறித்து சுமார் 80 கேள்விகள் கார்த்திக்கிடம் கேட்கப்பட்டன. அத்தனை கேள்விகளுக்கும் பொய் என்ற பதிலையே அவர் அளித்தார்.

“நடிகை மைத்ரியை நான் திரு மணம் செய்துகொள்ளவில்லை. மஞ்சள் கொம்பு தாலி கட்டவில்லை. மங்களூரில் பார்ட்டி வைக்கவில்லை. அவரது புகார் அனைத்துமே பொய். இதில் அரசியல் சதி இருக்கிறது. எனது தந்தை சதானந்த கவுடாவின் புகழை கெடுக்கும் நோக்கத்தில் இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளது”என்றார்.

அவர் இறுதியாக ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அழுத்தமாக சொன்னார். அது என்னவென்றால், “நடிகை மைத்ரி கர்நாடகாவில் பிரபலமானவர். இதனால் எனது நண்பர்கள் பலருக்கு அறிமுகமாகி இருந்தார். அந்த வகையில் எனக்கும் தோழி ஆனார். அதனால் அவரோடு சில மாதங்கள் நண்பராக பழகினேன். மற்றபடி, அவர் என்னுடைய‌ காதலி அல்ல. மைத்ரி சொன்னது எல்லாமே பொய். வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்கள் பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளன” என்றார்.

இவ்வாறு ஆர்.டி.நகர் போலீஸார் தெரிவித்தனர்.

கார்த்திக் கவுடாவிடம் நடைபெற்ற விசாரணை குறித்து நடிகை மைத்ரி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறும்போது, “ஊடகங்களுக்கு தெரியாமல் போலீஸார் கார்த்திக் கவுடாவிடம் ரகசிய விசாரணை நடத்தியது ஏன்? எனது புகார் குறித்து கார்த்திக் ஏன் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. இதிலிருந்தே இவ்வழக்கிலிருந்து கார்த்திக் கவுடாவை காப்பாற்ற போலீஸார் முயற்சி செய்கின்றனர் என்பது புரிகிறது. எனக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன்” என்றார்.

SCROLL FOR NEXT