இந்தியா

இழிவுதான் பாஜக எனக்கு அளித்த பரிசு: மோடி என்னை வசைபாடும்போது அவரை கட்டியணைக்கவே விரும்புகிறேன்: ராகுல் காந்தி

ஏஎன்ஐ

என்னை இழிவுபடுத்துவதுதான் பாஜக, ஆர்எஸ்எஸ் எனக்களித்த பரிசு.ஆனால், மோடி என்னை இழிவுபடுத்தி, வசைபாடும்போதெல்லாம், அவரை கட்டியணைக்கவே நான் விரும்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாகப் பேசினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசா மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணம் சென்றுள்ளார். புவனேஷ்வர் நகரில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அனைத்து தளங்களிலும் அதன் தாயான ஆர்எஸ்எஸ் அமைப்பின் சுவடுகளைக் காண முடிகிறது. நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளிலும் கல்வித்துறை, நீதித்துறை உள்ளிட்டவற்றிலும் ஊடுருவ ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சிக்கிறது. நாட்டில் ஒரு அமைப்பு மட்டும்தான் இருக்க வேண்டும். அதுஆர்எஸ்எஸ் மட்டும்தான் என்று நினைக்கிறார்கள்.

நாட்டில் உள்ள 120 கோடி மக்களால் இந்த நாடு ஆளப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். ஒருசிந்தனையால் இந்த நாடு ஆளப்படக்கூடாது. ஆனால் நாட்டின் முக்கிய நிறுவனங்களை, அமைப்புகளைச் செயல்படுத்துவதில் ஆளும் பாஜகவின் நோக்கத்தில் இருந்து எங்கள் நோக்கம் மாறுபட்டது. நாங்கள் அதிகாரப்பரவலையும், அரசின் அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் சுதந்திரத்தன்மையும், அரசியலைப்பு உரிமைகளையும் வழங்குவோம்.

கல்வித்துறை, சுகாதாரத்துறையைக் கைப்பற்றுதலும், தனியொருவர் ஆதிக்கத்தையும் முறியடிப்பது சவாலாக இருந்து வருகிறது. ஒருநடுத்தர குடும்பத்தார் கோடிக்கணக்கில் செலவு செய்தும் நல்ல தரமான கல்வியைப் பெற முடியவில்லை. அதேபோலத்தான் சுகாதாரத்துறையிலும் நிலவுகிறது.

நாங்கள் எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்போம், மக்களின் கருத்துக்களைக் கேட்போம். பிரதமர் மோடியைப் போல் அல்லாமல், தனக்குமட்டும் தெரியும் என்று இருக்கமாட்டோம். கருத்துப்பரிமாற்றம் என்பதே அவரிடம் இருக்காது. இந்த அடிப்படை வித்தியாசம்தான் எங்களுக்கும், பாஜகவுக்குமானது.

நாம் சீனாவுடன் போட்டியிட்டு வருகிறோம். நம்மால் போதுமான வேலைவாய்ப்புகளை வழங்கமுடியவில்லை.ஆனால், சீனா அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்குகிறது, இந்தச் சவாலை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு அரசியல்வாதியாக, மனிதனாக எனக்கு பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் எனக்குக் கொடுத்த பரிசு என்பது வசைபாடுதலும், இழிவுபடுத்துதலும்தான். இதைத்தான் அவர்கள் எனக்கு மிகச்சிறந்த பரிசாக அளிக்க முடிந்தது.

பிரதமர் மோடி என்னை இழிவுபடுத்தும்போது, அவமானப்படுத்தும்போது அவரைக் கட்டி அணைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.

என்னுடைய கருத்தில் இருந்து மோடி மாறுபட்டவர் என்பதை உணர்கிறேன். நானும் வேறுபடுகிறேன். அவருடன் கருத்து மோதல்களில் ஈடுபடுவேன். அவர் பிரதமர் இல்லை என்பதை நான் நிரூபிக்க நான் முயற்சிப்பேன். ஆனால், நான் அவரை வெறுக்கமாட்டேன். அவருடைய கருத்தை அவர் தெளிவாகக் கூற நான் அவருக்கு உரிமை அளிப்பேன்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

SCROLL FOR NEXT