நாட்டின் 70-வது குடியரசு தின விழாவை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் அவர் ட்வீட் செய்துள்ளார்
அமெரிக்காவில் இருந்து அருண் ஜேட்லி வாழ்த்து
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலன் தேறி வரும் அமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்காவில் இருந்து குடியரசு தின வாழ்த்துகளைப் பதிவு செய்திருக்கிறார்.
"அனைவருக்கும் 70-வது குடியரசு தின வாழ்த்துகள்" என அவர் ட்வீட் செய்திருக்கிறார்.
மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் குடியரசு தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் நாம் அனைவரும் தேசத்தின் அரசியல் சாசனம் போதித்த சாராம்சமான சமமான நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியனவற்றைப் பேணுவோம். வலுவான சிறப்பான இந்தியாவை நோக்கி முன்னேறுவோம். ஒரே குரலில் ஜெய்ஹிந்த் என்று உரக்கச் சொல்வோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
இந்த குடியரசு தின விழாவுக்கு தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமஃபோஸா சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கிறார். இவர் இந்திய குடியரசு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் 2-வது தென்னாப்பிரிக்க அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த 1995-ல் அப்போதைய அதிபர் நெல்சன் மண்டேலா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணிவகுப்பு மரியாதை ஏற்பு
காலை 10 மணியளவில் டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.