இந்தியா

நிகர்நிலை பல்கலை. அங்கீகார விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

எம்.சண்முகம்

அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு மீண்டும் அங்கீகாரம் அளிப்பது குறித்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.

மத்திய அரசின் டாண்டன் குழு பரிந்துரையின்படி, நாடு முழுவதும் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் 2009-ல் ரத்து செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில் 17 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் அடங்கும். இதில் இரண்டு பல்கலைக்கழகங்கள் தங்களை உயர்கல்வி மையங்களாக மாற்றிக் கொண்டன. ஒரு பல்கலை தனக்கு வழங்கப்பட்ட நிகர்நிலை பல்கலை அந்தஸ்தை திரும்ப ஒப்படைத்துவிட்டது.

மற்ற 41 பல்கலைக்கழகங்கள் சார்பில் டாண்டன் குழு பரிந்துரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அங்கீகாரம் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டதால், தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் நிலையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதன்படி, யுஜிசி சார்பில் மறு ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, விக்ரம்ஜித் சென் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள பாரத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தை வீடியோ கான்பரன்சிங் முறையிலும், புகைப் படங்களை பார்த்தும் ஆய்வு மேற்கொண்ட தாக பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

யுஜிசி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங்கிடம், “ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலை இப்போதும் இருக்கும் என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்? நேரில் ஆய்வு செய்தால் மட்டுமே உண்மை நிலை தெரியும். பாரத் பல்கலைக்கழகத்தை யுஜிசி குழு நேரில் ஆய்வு செய்து எட்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். ஏதாவது குறை இருப்பது தெரியவந்தால், அதை சரிசெய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இதர நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தொடர்பான மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

SCROLL FOR NEXT