இந்தியா

ஓட்டுபோடலன்னா காசை திருப்பிக் கொடுங்க: தேர்தலில் தோற்ற பெண் வேட்பாளரின் கணவர் வீடு வீடாக குமுறல்

செய்திப்பிரிவு

தேர்கலில் வாக்களிக்காமல் தோற்ற ஒரு வேட்பாளரின் கணவர், வீடுவீடாகச் சென்று வாக்களிக்காவிட்டால், பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று கேட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தெலங்கானா மாநிலம், சூரியபேட் மாவட்டம், ஜெய்ரெட்டிகுடம் கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்பது விசாரணையில் பின்னர் தெரியவந்தது.

தேர்தலில் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது தவறு என்பது தெரிந்திருந்தும் அதை சிலர் தொடர்ந்து செய்துகொண்டுதான் வருகிறார்கள்.

ஜெய்ரெட்டிகுடம் கிராமத்தில் கடந்த 25-ம்தேதி பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தது. இதில் ஹேமாவதி பிரபாகர் என்ற பெண் போட்டியிட்டார். இவரின் கணவர் உப்பு பிரபாகர்(வயது 55). இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், சில பிரச்சினைகள் காரணமாகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, தனது மனைவியை வார்டு தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட வைத்தார். அந்த வார்டில் 264 வாக்குகள் இருக்கும் நிலையில், ஜக் சின்னத்தில் ஹேமாவதி போட்டியிட்ட ஹேமாவதி 24 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

அதிக மது குடிப்பவரான பிராபாகர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வரை, தன் மனைவி போட்டியிடும் வார்டில் ஒவ்வொரு வீடாகச் சென்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மதுபாட்டிலும், தன் மனைவி போட்டியிடும் சின்னமான ஜக் (jug) கொடுத்து வாக்கு சேகரித்தார். மேலும், ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.800 முதல் ரூ.1500 வரை பணம் கொடுத்து வாக்கு சேகரித்துள்ளார். மேலும், தேர்தல் முடியும் காலம் வரை ஊரில் அந்த வார்டைச் சேர்ந்த ஆண்கள் யார் கேட்டாலும் மது (குவாட்டர் பாட்டில்) வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதில் ஹேமாவதி வெறும் 24 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இதனால், அதிருப்தி அடைந்த உப்பு பிரபாகர் பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிக்காத மக்கள் ஏன் தன் பணத்தை வைத்திருக்க வேண்டும். அவர்களிடம் பணத்தை திருப்பிக் கேட்போம் என முடிவு செய்தார்.

இதையடுத்து, கடந்த இரு நாட்களாக அட்சதை அரிசியை (மஞ்சள், அரிசி கலந்த கலவை) தனது மனைவி போட்டியிட்ட வார்டில் ஒவ்வொரு வீடாகப் பிரபாகர் கொண்டு சென்றார். என் மனைவிக்கு நீங்கள் வாக்களித்திருந்தால், இந்த அட்சதை அரிசியில் கை வைத்து சத்தியம் செய்து வாக்களித்தேன் என்று கூறுங்கள், இல்லாவிட்டால் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கூறினார். அட்சதை அரிசி மிகவும் புனிதமாக மக்கள் கருதுவதால், அதில் பொய் சத்தியம் செய்ய அச்சப்பட்டு வாக்களிக்காத மக்கள் பணத்தை திருப்பிக் கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "வேட்பாளரிடம் இருந்து வாங்கிய பணத்தை மக்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் என்பது வரவேற்கக் கூடியது என்றாலும், பிரபாகர் பிச்சைக்காரரைக் காட்டிலும் மோசமாகிவிட்டார். தேர்தலுக்குக் கொடுத்த காசை திரும்பக் கேட்பதா? ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மதுபாட்டிலும், ஜக் கொடுத்தார், கூடுதலாக ரூ.800 முதல் ரூ.1500 வரை பணம் கொடுத்தார். தேர்தலில் தனது மனைவி தோல்வி அடைந்துவிட்டதும் பிரபாகர் விரக்தி அடைந்துவிட்டார்.

கொடுத்த பணத்தை திருப்பி வாங்க அட்சதையில் சத்தியம் செய்யக் கூறுகிறார். அட்சதையில் பொய் சத்தியம் செய்யமாட்டோம் என்பதால் வாக்களிக்காதவர்கள் உண்மையைக் கூறி பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT