இந்தியா

உ.பி.யில் தனித்து போட்டி: இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரஸார்

ஆர்.ஷபிமுன்னா

வரும் மக்களவை தேர்தல் போட்டியில் கூட்டணி அமைத்த மாயாவதியும், அகிலேஷ்சிங் யாதவும் அதில் காங்கிரஸை சேர்க்கவில்லை. இதனால், தனித்து போட்டியிடும் நிலைக்கு உள்ளான அக்கட்சியினர் தன் லக்னோ அலுவலகத்தில் நேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

உபியின் 80 தொகுதியில் தலா 38 தொகுதிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜும், அகிலேஷின் சமாஜ்வாதியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இதன் கூட்டணிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்களான சோனியா காங்கி மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் இடங்களில் தாம் போட்டியிடப்போவதில்லை என இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனால், காங்கிரஸ் உபியில் தனித்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கவலைக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்கட்சியின் நிர்வாகிகள் தம் லக்னோ அலுவலகத்தில் தமக்கி ஏற்பட்ட நிலையை இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உபி காங்கிரஸ் தலைவர் வினோத் மிஸ்ரா கூறும்போது, ‘இதன்மூலம், காங்கிரஸ் உபியில் மீண்டெழும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனித்து போட்டியிடுவதே மாநில நிர்வாகிகளின் உணர்வாக உள்ளது. 2009-ல் பெற்ற 22 தொகுதிகளை விட வரும் தேர்தலில் அதிகம் பெறுவோம்.’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, உபியின் நிர்வாகிகளை அதன் பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் இன்று டெல்லிக்கு அழைத்துள்ளார். இவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் உபி மாநில தலைவரான ராஜ்பப்பரும் கலந்து கொள்கிறார்.

உபியின் தொகுதிகளின் அடிப்படையில் தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதில், மற்ற கட்சி தலைவர்களின் விட அதிக கூட்டங்களில் ராகுல் கலந்துகொள்ளும்படியும் பிரச்சாரம் திட்டமிடப்பட உள்ளது.

SCROLL FOR NEXT