சிபிஐ இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட 3 மூத்த அதிகாரிகளை சிபிஐ அமைப்பில் இருந்து இடமாற்றம் செய்து மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
சிபிஐ இயக்குநர் அஸ்தானா தவிர, சிபிஐ இணை இயக்குநர் அருண் குமார் சர்மா, சிபிஐ டிஐஜி மணீஷ் குமார் சின்ஹா, சிபிஐ கண்காணிப்பாளர் ஜெயந்த் ஜே.நாயக்நவாரே ஆகியோரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கப்பட்ட நிலையில், இந்த திடீர் மாற்றம் நடந்துள்ளது.
சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா, இணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவொருக்கு ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு கூறி மோதல் போக்கு கடந்த ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. இதனால், இரு உயரதிகாரிகளையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அலோக் குமார் வர்மா மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அலோக் குமாருக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை ரத்து செய்ததுடன், அவருக்கு மீண்டும் பொறுப்பை வழங்கியது.
மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய உயர்நிலைக் குழு, அலோக் குமார் வர்மாவை, சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து மாற்றியது. தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை தலைமை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். எனினும், அப்பதவியை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
அலோக் வர்மாவை நீக்கியது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நேற்று அஸ்தானா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பணியாளர், பயிற்சித் துறை நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், “ சிபிஐ அமைப்பில் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 உயரதிகாரிகளின் பணிக் காலம் உடனடியாக முடிவுக்கு வருகிறது. மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு அனுமதியின் பெயரில் இவர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.