கேரளாவில் லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்தும்கூட அந்தப் பரிசுத் தொகையைப் பெற இயலாமல் மூன்றாண்டுகளாகப் போராடி வருகிறார் கோயா.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பரனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோயா. வயது 66. இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டும் காருண்யா லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்தது. ஜூலை 9 2016-ல் அவருக்குப் பரிசு விழுந்தது. அதனை எடுத்துக் கொண்டு வங்கிக்குச் சென்றார் கோயா. ஆனால், லாட்டரி சேதமடைந்திருந்ததால் அதனை மாநில அரசின் லாட்டரிகள் துறைக்கு எடுத்துச் செல்லுமாறு வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.
கோயாவும் KE 454045 என்ற எண் கொண்ட லாட்டரியை எடுத்துக்கொண்டு திருவனந்தபுரத்தில் உள்ள மாநில லாட்டரிகள் துரை அலுவலகம் விகாஸ் பவனுக்குச் சென்றார். ஜூலை 13, 2016 அன்று தனது லாட்டரியை அந்த அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு வந்தார்.
மூன்று மாதங்களுக்குப் பின்னர் வருமாறு அதிகாரிகள் சொல்லியனுப்ப அவரும் அவ்வாறே செய்தார். ஆனால் அதன் பின்னர் இன்றுவரை அவர் அந்தப் பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறார் கோயா.
சேதமடைந்திருந்த அந்த லாட்டரியை ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளாததுதான் எனது ஒரே தவறு என்று புலம்புகிறார்.
மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவர் நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக்கை சந்திக்குமாறு கூறப்பட்டது. ஆனாலும் கோயாவுக்கு அவரது பரிசுத் தொகை கிடைக்கவில்லை. கோயா, திருவனந்தபுரத்திலேயே தங்கிவிட்டார். ஏதாவது சிறுசிறு வேலைகள் செய்து கொண்டும் அது கிடைக்காத நேரத்தில் யாசகம் பெற்றும் வாழ்கிறார்.
ஒரு காலத்தில் கோயா...
கோயா ஒரு காலத்தில் லாட்டரி ஏஜெண்டாக இருந்தார். 1990-களில் லாட்டரிகளுக்கு திடீர் தடை வந்தது. அப்போது அவருக்கு ரூ.76 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. அவரது வீடுகளையும் நிலத்தையும் விற்றுக் கடனை அடைத்தார். ஆனாலும் அவருக்கு இப்போதும் ரூ.32 லட்சம் கடன் இருக்கிறது.
இந்நிலையில்தான் தனது லாட்டரி பரிசுத் தொகையைக் கோரி முதல்வரைச் சந்தித்தார் கோயா. லாட்டரி ஏஜெண்ட் அளித்த லெட்டர் இருந்தாலும்கூட கோயாவுக்குப் பணம் கிடைக்கவில்லை.
தனது லாட்டரியை மாநில லாட்டரி துறைதான் தொலைத்துவிட்டது. அதனால்தான் தனக்கு எந்த ஒரு முறையான பதிலும் சொல்லவில்லை என வருந்துகிறார் கோயா.
கோயாவின் மனைவி பிள்ளைகள் கோழிக்கோட்டில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கின்றனர். 1970-களில் தனது ஆரம்ப நாட்களில் சர்க்கஸ் செய்து பிழைப்பு நடத்தினார் கோயா. இப்போதைய நெருக்கடியான சூழல் தன்னை மீண்டும் அதே நிலைக்குத் தள்ளுவதாக அவர் வருந்துகிறார்.
ரூ.1 கோடி இருக்கு... ஆனால் இல்லை என்ற சூழலில் தவித்து வருகிறார் கோயா. பரிசு விழுந்து இரண்டு ஆண்களுக்குப் பின்னர் பரிசுத் தொகையைப் பெற முடியாது என்கிறது கேரள அரசின் சட்டம்.