மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 15 தொழிலாளர்களில் மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தை நிலப்பரப்புக்கு கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 45 நாட்களுக்குப் பின்னர் 2-வது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேகாலயா மாநிலத்தில் கிழக்கு ஜாய்ன்டியா மலைத்தொடரில் பாயும் லைட்டின் ஆற்றின் அருகே உள்ள மூக்னூர் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் கடந்த மாதம் டிசம்பர் 13-ம் தேதி 15 பேர் சிக்கிக் கொண்டனர். இங்குள்ள சுரங்கம் அகன்று இல்லாமல் குறுகலாக மிக ஆழமாக அமைந்துள்ளதால் இதனை எலிப்பொறி சுரங்கம் என அழைக்கின்றனர்.
சுரங்கத்தில் சிக்கிய 15 தொழிலாளர்களை மீட்க முடியாத நிலையே இருந்த சூழலில் 32 நாட்களுக்குப் பிறகு கடந்த (ஜனவரி 17) ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் சடலத்தைக் கண்டெடுத்தனர். தற்போது மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை அந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் எலக்ட்ரானிக் கண்களும் ரோபோடிக் கைகளும் கொண்ட இயந்திரம் சடலத்தை கண்டுபிடித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டு மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் சடலம் அழுகிய நிலையில் இருப்பதால் அதை வெளிக் கொண்டுவர உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறினார்.
அரசுத் தரப்பில் 15 தொழிலாளர்களே சிக்கியிருப்பதாக சொன்னாலும், விபத்தின்போது தப்பித்த தொழிலாளியோ 17 பேர் உள்ளே சிக்கியதாக தொடர்ந்து கூறிவருகிறார். இதற்கிடையில் முதலில் கண்டெடுக்கப்பட்ட அமீர் ஹுசைன் என்பவரின் சடலம் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.