குஜராத் மாநிலம் கிர் காட்டில் இருந்து சிங்கங்களை உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அளித்தது தொடர்பாக நரேந்திர மோடிக்கும், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
உ.பி.யில் பரேலியில் செவ்வாய் கிழமை பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ‘உத்தரப் பிரதேசத்தில் எடாவாவில் சரணாலயம் அமைப்பதற்காக கேட்கப்பட்ட பத்து சிங்கங்களில் ஆறு சிங்கங்களை குஜராத்தின் கிர் காடுகளில் இருந்து அளித்தோம். உத்தரப் பிரதேசத்தில் அந்த சிங்கங்களை அடைத்து வைத்திருக் கிறார்கள்.’’ எனக் கிண்டலுடன் புகார் கூறி இருந்தார்.
முலாயம் சிங்கை தம் குடும்பத்துடன் வந்து கிர் காடுகளை பார்க்க அழைப்பு விடுப்பதாகவும், அங்கு சுதந்திரமாக சுற்றி வரும் சிங்கங்களை வந்து பார்க்கும்படியும் மோடி தெரிவித்தபோது கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் லக்னோவில் அகிலேஷ் யாதவ் பேசினார். அப்போது, ‘கொடுக்கல், வாங்கல் முறையில் குஜராத் அரசிடம் இருந்து சிங்கங்களை பெற்றோமே தவிர இலவசமாக இல்லை. சிங்கங்களுக்கு பதிலாக, உத்தரப் பிரதேசத்தின் கழுதைப்புலிகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தோம்’ எனப் பதிலளித்தார்.
இந்தியாவில் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டும்தான், ஆசிய வகை சிங்கங்கள் அடைத்து வைக் கப்படாமல் சுதந்திரமாக உலவ விடப்பட்டுள்ளன. எடவாவில் உள்ள தனது சொந்த கிராமமான சிபையில் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் திறந்தவெளி சரணாலயத்தை அகிலேஷ் அமைத்துள்ளார்.