இந்தியா

மீண்டும் எம்.பி.யாக முயற்சி - சமாஜ்வாதியில் சேருகிறார் அமர்சிங்: ஜெயப்பிரதாவும் இணைகிறார்

ஆர்.ஷபிமுன்னா

சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேறிய அமர்சிங், அதில் மீண்டும் சேர்வதற்கு முழு அளவில் முயற்சி செய்து வருகிறார். வரும் அக்டோபர் 8 முதல் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ள சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயற்குழுவில் இதுதொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

வரும் நவம்பருடன் அமர்சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைகிறது. மேலும் சில காலியிடங்களும் உள்ளன. இதில், சமாஜ்வாதிக்கு ஆறு உறுப்பினர்கள் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்குள் சமாஜ் வாதி கட்சியில் இணைந்து முலாயம் சிங் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக அமர்சிங் முயல்கிறார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் சமாஜ்வாதி கட்சி தேசிய நிர்வாகிகள் கூறியதாவது: அமர்சிங் சமாஜ்வாதியில் சேரத் தடையாக இருந்தவரான ராம் கோபால் யாதவும், மற்றொரு மூத்த தலைவரான ஆசம்கானும் சமரசம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, செயற்குழுவுக்கு முன்னதாகக் கட்சியில் இணைவதற்கு வாய்ப்புகள் அதிகம்’ என்றனர்.

முலாயமின் நெருக்கமான நண்பராக இருந்த அமர்சிங், கடந்த 2009-ம் ஆண்டு சமாஜ்வாதி யிலிருந்து வெளியேறினார்.

சுயேச்சையாக போட்டி

கட்சியில் இணைய எதிர்ப்பு கிளம் பினால் சுயேச்சையாகப் போட்டி யிட்டு, சமாஜ்வாதியின் ஆதரவை பெறவும் அமர்சிங் திட்டமிட்டி ருப்பதாகக் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் அமர்சிங் தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை டெல்லியில் நடத்தினார். அதில், சமாஜ்வாதி கட்சியின் உ.பி. சட்டசபை உறுப்பினர்கள் பலர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

தனது நெருங்கிய நண்பரான ஜெயப்பிரதாவையும் கட்சியில் இணைத்து, மாநிலங்களவை உறுப்பினராக்க அமர்சிங் திட்டமிட்டுள்ளார்.

அமர்சிங்கின் வெளியேற்றத் துக்குப் பிறகு, சமாஜ்வாதியில் இருந்து நீக்கப்பட்ட ஜெயப்பிரதா, மக்களவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய லோக் தளம் சார்பில் பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்டு 25,000 வாக்குகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தார்.

சமாஜ்வாதியில் இருந்த போது, ராம்பூர் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்.பி.யாக ஜெயப் பிரதா தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT