முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெற்றிகரமான பிரதமர், திடீரென, எதிர்பாராத சூழலில் பிரதமராக வந்தவர் அல்ல என்று சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் பயோபிக்காக எடுக்கப்பட்டுள்ள தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படம் வரும் 11-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தத் திரைப்படத்தில் மன்மோகன் சிங்காக இந்தி நடிகர் அனுபம் கேர் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் உண்மைக்கு மாறான சம்பவங்கள் பல இடம் பெற்றுள்ளன எனக்கூறி காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
அரசியல்ரீதியாக பெரும் எதிர்ப்பை தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படம் ஈட்டியுள்ளது. மகாராஷ்டிராவில் இந்தத் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதாக மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில் சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத்திடம் தி ஆக்சிடெண்டல் பிரைம்மினிஸ்டர் திரைப்படம் குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திறமையான நிர்வாகி. வெற்றிகரமான பிரதமர். ஏதோ சந்தர்ப்ப சூழலால், திடீரென ஏற்பட்ட கட்டாயத்தால் மன்மோகன் சிங் பிரதமராக பதவி ஏற்கவில்லை.
திறமையான பிரதமராக இல்லாமல் இருந்தால், ஒரு நாட்டை 10 ஆண்டுகள் நிர்வகித்து இருக்க முடியாது. மக்கள் மதிக்கும் பிரதமராக மன்மோகன் சிங் இருக்கிறார். நரசிம்மராவுக்கு பின் வெற்றிகரமான பிரதமர் என்றால், அது மன்மோகன்சிங்தான்” எனத் தெரிவித்தார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கொண்டு சிவசேனா தொடர்ந்து அந்தக் கட்சியையும், கூட்டணியையும் விமர்சித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.