இந்தியா

ஜேஆர்எப், எஸ்ஆர்எப் உள்பட கல்வி ஆய்வு படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சீனியர், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (எஸ்ஆர்ப், ஜேஆர்எப்) உள்ளிட்ட கல்வி ஆய்வு படிப்புகளுக்கான உதவித்தொகையை 20 சதவீதம் உயர்த்தியுள்ளது மத்தியஅரசு.

கடந்த 2010-க்கும் ஆண்டுக்குப்பின் உயர்த்தப்பட்ட அளவில் இது மிகவும் குறைவானதாகும். இந்த உயர்வு போதுமானதாக இருக்காது, என ஆய்வுபடிப்பில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் ஆய்வுப்படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவர்களின் கல்விஉதவித்தொகை ஆய்வு செய்யப்படவில்லை எனக் கூறி மாணவர்கள் போராட்டங்கள், தர்ணாவிலும் ஈடுபட்டநிலையில் இப்போது அறிவிப்பு வந்துள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூனியர் ரிசர்வ் பெல்லோஷிப்தாரர்கள் ரூ.25 ஆயிரம் பெற்ற நிலையில் இனி ரூ.31ஆயிரம் பெறுவார்கள்.

சீனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பயில்பவர்கள், முனைவர் பட்டத்துக்காக ஆய்வு மேற்கொள்பவர்கள் மாதம் ரூ.35 ஆயிரம் பெறுவார்கள். முனைவர் பட்டம் பெற்றபின் 3ஆண்டுகள் ஆய்வில் ஈடுபட்ட அனுபவம் உள்ளவர்களான ஆய்வு உதவியாளர்களுக்கான(ஆர்ஏ) கல்வி உதவித்தொகை ரூ.47 ஆயிரத்தில் இருந்து ரூ.54 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆய்வுபடிப்பில் ஈடுபட்டுள்ள 1.25 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் செயலாளர் அசுடோஷ் சர்மா தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறுகையில், " பணவீக்கத்தின் அடிப்படையில் இந்த உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு தொகையை பரிந்துரை செய்து அனுப்பி இருந்தோம். ஆனால், மத்திய மனித வளத்துறை, அறிவியல் துறை, நிதித்துறை ஆகிய விவாதித்து இந்த முடிவை எடுத்துள்ளன. அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை மறுஆய்வு செய்யப்படுவதற்கான திட்டம் இருக்கிறது " எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மத்திய அரசு அறிவித்துள்ள இந்த கல்வித்தொகை உயர்வு ஏற்கமுடியாது என்று ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி கல்வி நிறுவனத்தில் முனைவர் ஆய்வில் ஈடுபட்டுள்ளவரும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதியான நிகில் குப்தா கூறுகையில், " ஏறக்குறைய 56 சதவீதம் கல்வி உதவித்தொகை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், 20 சதவீதம் என்பதை ஏற்க முடியாது. தொடர்ந்து போராடுவோம்" எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT