இந்தியா

காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு தொடரும் நெருக்கடி; கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் ஹரியாணாவில் முகாம்: நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என எடியூரப்பா சூசகம்- காங்கிரஸார் முற்றுகை போராட்டம்

இரா.வினோத்

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் எடியூரப்பா அக்கட்சியின் 104 எம்எல்ஏக்களுடன் ஹரியாணாவில் உள்ள குருகிராமில் முகாமிட்டுள்ளார். பாஜக ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக கூறி, காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத), காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் மட்டுமல்லாமல் பகுஜன் சமாஜின் ஒரு எம்எல்ஏ, 2 சுயேச்சைகள் ஆதரவு அளித்தனர். அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு ஆகியவற்றில் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

அதிருப்தி எம்எல்ஏக்களை சமாளிக்க, அண்மையில் 2-வது முறையாக அமைச்ச ரவையை குமாரசாமி விரிவாக்கம் செய்தார். அப்போது 8 பேர் அமைச்சரவை யில் சேர்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளியும், சுயேச்சை எம்எல்ஏ சங்கரும் அமைச் சரவையில் இருந்து நீக்கப்பட்டன‌ர். ஏமாற்றமடைந்த இருவரும், அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேருடன் ரகசிய ஆலோசனை நடத்தினர். இதனிடையே பாஜக மாநில தலைவர் எடியூரப்பா கடந்த வாரம் ரமேஷ் ஜார்கிஹோளி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், ''மும்பையில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ், பி.சி. பாட்டீல், ஆனந்த் சிங் ஆகிய 5 பேரை பாஜக தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கூட்டணி அரசைக் கவிழ்க்க அதிருப்தி எம்எல்ஏக்களுடன் குதிரை பேரம் நடத்தி வருகின்றனர்'' என பகிரங்க‌மாக குற்றம்சாட்டினார்.

சுயேச்சைகள்

இந்நிலையில் சுயேச்சை எம்எல்ஏக்கள் சங்கர், நாகேஷ் ஆகியோர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்தனர். இதுகுறித்து கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவுக்கு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பினர். இதனால் குமாரசாமி அரசுக்கான ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 117 ஆக குறைந்தது.

இதுகுறித்து சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் கூறும்போது, ‘‘காங்கிரஸ் - மஜத இடையே ஒற்றுமை இல்லை. இரு கட்சியினரிடமும் நல்ல புரிதல் இல்லாததால், குமாரசாமி செயல்படாமல் இருக்கிறார். இந்த கூட்டணி அரசால் கர்நாடக மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. எனவே நிலையான அரசை அமைக்க முயற்சிக்கும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளேன்''என தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஓரிரு தினங்களில் பெங்களூரு திரும்ப முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுயேச்சை எம்எல்ஏக்கள் பாணியில் ஆளுநரை சந்தித்து காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு அளித்துள்ள தங்களின் ஆதரவை திரும்ப பெறுவதாக க‌டிதம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இல்லாவிடில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அத்தனை பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

செல்போனுக்கு தடை

இதனிடையே க‌ர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் 104 பேரும் அக்கட்சியின் தலைவர் எடியூரப்பா தலைமையில் ஹரியாணாவின் குருகிராமில் உள்ள தனியார் விடுதியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் செல்போன், சமூக வலைதளம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எடியூரப்பா, ஈஸ்வரப்பா, அசோக் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பாஜக எம்எல்ஏக்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து எடியூரப்பா கூறும்போது, ‘‘கர்நாடக அரசியலில் குழப்பமான நிலை நீடிப்பதால் எங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது. அதனால் எங்கள் கட்சி எம்எல்ஏக்களை இங்கு தங்க வைத்துள்ளோம். இன்னும் ஓரிரு நாட்கள் கழித்து பெங்களூரு திரும்புவோம். நாங்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. எதிரெதிர் துருவங்களான காங்கிரஸ் - மஜத கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது. அடுத்த சில நாட்களில் பாஜக தொண்டர்கள் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்'' என தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸார் குற்றம் சாட்டியுள்ளனர். குருகிராமில் பாஜக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதியை முற்றுகையிட்ட ஹரியாணா காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹரியாணா மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரதீப் சிங் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜக தலைவர்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் தனியார் விடுதிக்கு உடனடியாக பலத்த போலீஸ் போடப்பட்டு, அங்கிருந்த காங்கிர ஸார் அப்புறப்படுத்தப்பட்டனர். இதேபோல மும்பையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியிருந்த விடுதிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு நுழைய முயன்ற பத்திரிகையாளர்களை போலீஸாரும் தனியார் பாதுகாவலர்களும் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமாரசாமி நம்பிக்கை

கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறும்போது, ‘‘எங்களின் கூட்டணி அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களுடனும், எங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். பாஜகவின் கனவு பலிக்காது. 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்ப பெற்றதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விரைவில் திரும்ப வருவார்கள். பாஜகவின் சதி வேலைகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்'' என்றார்.

கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா, ‘‘காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு கவிழ்ந்தால், ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரும்'' எனத் தெரிவித்துள்ளார். 104 எம்எல்ஏக்களை கொண்ட பாஜகவுக்கு ஆட்சியை பிடிக்க இன்னும் 10 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். குமாரசாமிக்கு ஆதரவாக தற்போது 117 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் சிலரை இழுக்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருவதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT