இந்தியா

கன்னியாஸ்திரிகளைப் பாதுகாக்க பினராயி அரசு என்ன செய்தது?- ஸ்மிருதி இரானி சரமாரி கேள்வி

செய்திப்பிரிவு

கேரளாவில் கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகப் போராடிய கன்னியாஸ்திரிகளைப் பாதுகாக்க, பினராயி அரசு என்ன செய்தது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பிஷப் பிராங்கோ மூலக்கல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குருவிளங்காடு கன்னியாஸ்திரி நீதிக்காகப் போராடினார். அவருக்கு ஆதரவாக உடன் தங்கியிருந்த கன்னியாஸ்திரிகள் ஐந்து பேர் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட சக கன்னியாஸ்திரிக்காகப் போராடிய ஐவரில் நால்வர், குருவிளங்காடு  கான்வென்ட்டில் இருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாஸ்திரி அனுபமா கேலமங்கலது வெளியில் பஞ்சாப்பில் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கன்னியாஸ்திரி அங்கிதா உரும்பில் கண்ணூரில் உள்ள பரியாரம் பகுதியிலும் கன்னியாஸ்திரி ஆல்பி பல்லச்சேரில் பிஹாரில் பணிபுரிய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது. கன்னியாஸ்திரி ஜோசபைன் வில்லூன்னிக்கல் ஜார்கண்ட் செல்லப் பணிக்கப்பட்டார்.

இதில் கன்னியாஸ்திரிகள் அனுபமா, அங்கிதா, ஆல்பி ஆகியோர் இன்னும் பஞ்சாப், கன்னூர் மற்றும் பிஹார் செல்லவில்லை.

பெண்களுக்கு அதிகாரமும் சம உரிமையும் அளிப்பது (சபரிமலைக்கு பெண்களை அனுமதித்தது) குறித்துப் பேசும் மக்கள் அனைவரும் இதுகுறித்து ஏன் வாய்திறக்கவில்லை? அரசியல் காரணங்களுக்காக பெண்களுக்கு அதிகாரமளிப்பது வசதிப்படவில்லை போல! இதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட வேண்டும்.

கன்னியாஸ்திரிகள் நால்வரின் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கேரள அரசு பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஸ்மிருதி இரானி.

SCROLL FOR NEXT