தமிழ்நாட்டில் அமையும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1264 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய செலவினங்களுக்கான நிதிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை இன்று மாநிலங்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் அஸ்வின்குமார் சௌபே மாநிலங்களவையில் அளித்தார்.
குளிர்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று மாநிலங்களவையின் அதிமுக உறுப்பினர் டாக்டர்.வா.மைத்ரேயன் ஒரு கேள்வி எழுப்பினார். அதில் அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி குறித்தும், புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது குறித்தும் கேட்டிருந்தார். இதற்கு மத்திய இணை அமைச்சரான அஸ்வின்குமார் பதிளித்தார்.
தனது பதிலில் அமைச்சர் அஸ்வின் கூறும்போது, ''பிரதம மந்திரி சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகள் மேம்படுத்த தமிழ்நாட்டில் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் தேர்வாகி மேம்படுத்தப்பட்டது.
இதில் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மேம்பாட்டிற்கான மொத்த செலவு ரூ.139.31 கோடியில் (மத்திய அரசு பங்காக நிதி ரூ.100 கோடி, மாநில அரசு பங்கு ரூ.39.31 கோடி) மத்திய அரசு தனது பங்காக ரூ.92.84 கோடி வழங்கியுள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மேம்பாட்டிற்கான மொத்த செலவு ரூ.150 கோடியில் (மத்திய அரசு பங்காக நிதி ரூ.125 கோடி, மாநில அரசு பங்கு ரூ.25 கோடி) மத்திய அரசு தனது பங்காக ரூ.99.77 கோடி வழங்கியுள்ளது.
அதேபோல் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மேம்பாட்டிற்கான மொத்த செலவு ரூ.150 கோடியில் (மத்திய அரசு பங்காக நிதி ரூ.120 கோடி, மாநில அரசு பங்கு ரூ.30 கோடி) மத்திய அரசு தனது பங்காக ரூ.104.72 கோடி வழங்கியுள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மேம்பாட்டிற்கான மொத்த செலவு ரூ.150 கோடியில் (மத்திய அரசு பங்காக நிதி ரூ.120 கோடி, மாநில அரசு பங்கு ரூ.30கோடி) மத்திய அரசு தனது பங்காக ரூ.108.62 கோடி வழங்கியுள்ளது'' என்று அஸ்வின் தெரிவித்தார்
மேலும் இது குறித்து அமைச்சர் அஸ்வின், மக்கள் நல்வாழ்வு மற்றும் பொது சுகாதாரம் மாநில அரசின் நிர்வாக வரம்புக்குள் வருவதால் புதிய அரசு மருத்துவமனை கல்லூரிகள் அமைத்திடும் முடிவு மாநில அரசின் கையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் சுகாதாரப் பணிகளுக்கு கூடுதல் வலு சேர்க்க குறிப்பாக பிராந்திய பாகுபாடுகளை களையும் நோக்கில் மத்திய அரசும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் இணை அமைச்சர் அஸ்வின் தகவல் அளித்தார்.
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை
தமிழ்நாட்டில் புதிய மருத்துவமனை கல்லூரிகள் உருவாக்க மத்திய அரசிடம் புதிய திட்டம் ஏதும் உள்ளதா என மைத்ரேயன் இன்று துணைக்கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு திட்டவட்டமாக அமைச்சர் அஸ்வின், ‘இல்லை’ எனப் பதில் அளித்தார்.