உருளைக்கிழங்கு பயிருக்கு மதுபானத்தை தெளித்தால் நன்கு பெருகி விளையும் என விஷமிகள் வதந்தி பரப்பியதால் அதை நம்பி விவசாயிகள் மதுபானம் தெளித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலந்த்ஷெஹர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகஅளவில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது. குறிப்பாக குளிர் சீசனான தற்போது பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர்.
உருளைக்கிழங்குகள் திரட்சியாகவும், அதிக எடை கொண்டதாகவும் வளர்வதற்காக சில குறிப்பிட்ட மருந்துகளை வாங்கி விவசாயிகள் தெளிப்பது வழக்கமாக உள்ளது. இந்தநிலையில் உருளைக்கிழங்கு பயிரில் மதுபானத்தைத் தெளித்தால் அது அதிக எடையுடன் வளரும் என சிலர் வதந்தி பரப்பியுள்ளனர்.
இதனால் அங்கு தற்போது விவசாயிகள் மதுபானங்களை வாங்கி உருளைக்கிழங்கு பயிருக்கு தெளித்து வருகின்றனர். ஆனால் இதனை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில் ‘‘விவசாயிகளை திசை திருப்பும் வகையில் சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற வதந்தியை பரப்பியுள்ளனர். இதற்கு அறிவியல் ரீதியான எந்த ஆதாரமும் இல்லை. விவசாயிகள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்’’ எனக் கூறினார்.
உருளைக்கிழங்கு பயிருக்கு மதுபானம் தெளித்தால் வீரியமாக வளர்கிறதோ இல்லையோ ஆனால் விவசாயிகள் அதிகஅளவில் வாங்குவதால் மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.