மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்றும் அதிமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதுபோலவே பல்வேறு கட்சி எம்.பி.க்களும் வெவ்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி கோஷங்கள் எழுப்பியதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
காவிரியின் நதியின் குறுக்கே, மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வரைவுத் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தமிழ அரசு வலியுறுத்தி வருகிறது. காவிரி ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பிரதிநிதிகளும் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதையடுத்து தமிழக எம்.பி.க்கள் காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் அதிமுக, திமுக எம்.பி.க்கள் காவிரி விவகாரம் தொடர்பாக கோஷங்களை எழுப்பினார்கள்.
அதிமுக எம்.பி.க்கள் கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது, திமுக எம்.பி.க்களும் சேர்ந்து கோஷங்களை எழுப்பி அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் மேகேதாட்டு விவகாரத்தை எழுப்பினர். கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது.
இதுபோலவே ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி சிவசேனா எம்.பி.க்களும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாமல் இரண்டு முறை அவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.
மூன்றாவது முறை அவை கூடியபோதும், அதிமுக உள்ளிட்ட எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களைவை இன்று காலை கூடியதும் நாடாளுமன்றத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 17-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.