கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018, டிசம்பர் 3-ம் தேதி வரை பிரதமர் மோடி 84 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார், இதற்கான செலவு ரூ.2 ஆயிரம் கோடிக்கு அதிகம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, அதிகமான வெளிநாடுகளுக்குப் பயணம் செல்கிறார் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம் பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து எந்தெந்த நாடுகளுக்குப் பயணித்துள்ளார், அதற்கான செலவு, எந்தெந்த அமைச்சர்கள் உடன் சென்றனர் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அந்தக் கேள்விகளுக்கு மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி கடந்த 2014, ஜூன் 15-ம் தேதியில் இருந்து 2018-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி வரை 90 முறை வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளார். இதற்காக அரசுக்கு ரூ.2 ஆயிரத்து 12 கோடி செலவாகியுள்ளது. இதில் பிரதமர் மோடி பயணித்த தனி ஏர்இந்தியா விமானத்தின் பராமரிப்புக்கு மட்டும் ரூ. ஆயிரத்து 583.18 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. விமானப் பயணத்துக்கு ரூ.429.28 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட ஹாட்லைனுக்காக ரூ.9.12 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட ஹாட்லைனுக்காக கடந்த 2017 மே மாதம் முதல் 2018, டிசம்பர் வரை செலவிடப்பட்டுள்ளது.
2014, ஜூன் 15-ம் தேதி முதல், 2018, ஜூன் 10-ம் தேதி வரை பிரதர் மோடி 84 நாடுகளுக்குப் பயணித்துள்ளார், இதற்காக அப்போதுவரை ரூ.1,484 கோடி செலவிடப்பட்டு இருந்தது. அதன்பின் 2018, ஜூன் 10ம் தேதிக்குப் பின் டிசம்பர் 3-ம் தேதி வரை 6 முறை வெளிநாடுகளுக்கு மோடி பயணித்துள்ளார்.
பிரதமர் மோடி இந்தப் பயணத்தின் போது, உலகத் தலைவர்களான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டவர்களைப் பலமுறை சந்தித்துள்ளார்.
சமீபத்தில் அர்ஜென்டினாவில் உள்ள பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ஜி20 மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்தார். இவ்வாறு அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்