இந்தியா

கஜா புயல் பாதிப்பு; தமிழகத்துக்கு ரூ.1,146 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்

ஏஎன்ஐ

புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடந்த உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நிவாரணமாக ரூ.1,146 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கஜா புயல் நாகை அருகே வேதாரண்யத்தில் கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி நள்ளிரவு கரையைக் கடந்தது. இதனால் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிப்பு அடைந்தன.

அதன்பின் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்கட்ட அறிக்கை அளித்தார்.

கஜா புயல் நிவாரணமாக 15,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை விரைந்து அனுப்புமாறு கோரினார்.

அதைத்தொடர்ந்து, சென்னை வந்த மத்திய குழுவினர் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் அளித்தனர்.

கஜா புயல் பாதிப்பிற்காகத் தமிழகத்திற்கு ரூ.353 கோடி நிதியை கடந்த 1-ம் தேதி ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்த நிவாரணத் தொகையை மாநில பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கியது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் குழுக்கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி, வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங், நிதிஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் தேசிய பேரிடர் நிதியில் இருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ.1,146.12 கோடியை ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT