இந்தியா

விவசாயிகளின் தற்கொலை ஆந்திராவில் இனி இருக்காது: சந்திரபாபு நாயுடு உறுதி

என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம், அமராவதியிலிருந்து நேற்று சமூக நலத்துறை, வேளாண்மை போன்ற துறைகளில் கடந்த நாலரை ஆண்டுகளில் ஆந்திர அரசு சாதித்த நல திட்டங்கள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

கடந்த நாலரை ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாய் ஆந்திராவில் இரு மடங்கானது. 5 ஆண்டுகளாக குறைந்த அளவே மழை பெய்தாலும், விவசாயத்தில் நஷ்டம் ஏதும் ஏற்படவில்லை.

விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 2013-14-ம் ஆண்டில் ரூ.6,128 கோடியாக இருந்த விவசாய பட்ஜெட், தற்போது 2018-19-ம் ஆண்டில் ரூ.19,070 கோடியாக உயர்ந்துள்ளது. 20.04 லட்சம் ஹெக்டேருக்கு 100 சதவீதம் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 1.80 லட்சம் மெட்ரிக் டன் மைக்ரோ சத்து உரம் விநியோகம் செய்யப்பட்டது. விவசாயம், தோட்டக்கலை துறைக்கு தொடர்புள்ள 58.23  லட்சம் விவசாயிகளுக்கு 10 சதவீத வட்டியுடன் வங்கி கடன் ரத்து செய்யப்பட்டது.

விவசாய நலனுக்காக தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளாத மாநிலமாக ஆந்திரா உருவாகும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

SCROLL FOR NEXT