இந்தியா

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ‘‘இன்று சஜ்ஜன் குமார்; நாளை கமல்நாத்’’ - அகாலிதளம் விளாசல்

செய்திப்பிரிவு

டெல்லியில் 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை வழக்கில் தொடர்புடைய கமல்நாத்தை மத்திய பிரதேச முதல்வராக பதவியில் அமர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது, அவருக்கு விரைவில் நீதிமன்றம் தண்டனை வழங்கும் என மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் கூறியுள்ளார்.

கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப் பட்டார்.  அவர் சீக்கிய காவலர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக புகார் எழுந்தது.

டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய அமைச்சரும், சிரோன்மணி அகாலி தளக்கட்சியின் மூத்த தலைவருமான ஹர்சிம்ரத் கவுர் கூறியதாவது

‘‘இந்திரா காந்தி மரணத்துக்கு பிறகு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான நடந்த மிகக் கொடூரமான இனப்படுகொலை வழக்கில் முதன்முறையாக நீதி வென்றுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீக்கியர் படுகொலையில் தொடர்புடைய கமல்நாத்துக்கு மத்திய பிரதேச முதல்வர் பதவியை காங்கிரஸ் வழங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் சஜ்ஜன் குமாரை போலவே நாளை ஜெகதீஷ் டைட்லர் அதைத் தொடர்ந்து கமல்நாத்துக்கும் நீதிமன்றம் தண்டனை வழங்கும் என நம்புகிறோம்.

காங்கிரஸூக்கும் சீக்கியர்கள் படுகொலைக்கும் தொடர்பு இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய பொய்யை கூறினார். சீக்கியர் படுகொலையில் ராஜீவ்காந்தி, சோனியா காந்தி என அனைவருக்கும் தொடர்பு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறினார்.  

SCROLL FOR NEXT