சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து அவர் செய்திருந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதனன்று தொடர்ந்தது.
அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் கூறியபோது, “இந்த விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும், செயலும் சிபிஐ மீதான நாட்டு மக்களின் நம்பிக்கையை குலைக்கும் விதமாக இருக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு தன்னுணர்வுடன் செயல்பட்டது.
மத்திய அரசு தனக்குக் கிடைத்த ஆதாரங்களை மிகவும் துல்லியமாக ஆராய்ந்து பல விவகாரங்களையும் ஆய்ந்தறிந்து அலோக் வர்மாவை விடுப்பில் அனுப்புவதுதான் சிறந்த வழி என்ற முடிவுக்கு திருப்திகரமாகவே வந்துள்ளது.
சிபிஐ-யின் இரண்டு உயர்மட்ட அதிகாரிகளிடையே கடும் சண்டை ஏற்பட்டதை மத்திய அரசு பொறுப்புடனும் கவலையுடனும் அணுகுகிறது. அரசு இதை மூடிமறைக்க விரும்பவில்லை, வெளிப்படையாக்கியது. எங்கள் குறிக்கோள் என்னவெனில் சிபிஐ மீதான மக்கள் நம்பிக்கை பாழ்பட்டுவிடக்கூடாது என்பதே. அதனால்தன இருவரும் விடுப்பில் அனுப்பப்பட்டனர். வர்மாவை பணியிட மாற்றம் செய்யவில்லை, பணியிடம் மாற்றம் என்பது ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றுவது.
சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாட்டின் முக்கிய விசாரணை அமைப்பான சிபிஐயின் நேர்மையை கீழே தள்ளியுள்ளது” என்றார்.