இந்தியா

நாடாளுமன்றத்தை முடக்கிய ரஃபேல், ராகுல் விவகாரம்: எம்.பி.க்கள் அமளியால் ஒத்திவைப்பு

பிடிஐ

ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று நாடாளுமன்றத்தின்இரு அவைகளிலும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி 4 நாட்கள் ஆகியும் ஒருநாள் கூட அவை ஆக்கப்பூர்வமாக நடக்கவில்லை. கடந்த 4 நாட்களும் ஏதாவது ஒரு காரணத்தால் எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது, தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரி வந்தனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அந்த மனுக்களை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் ரஃபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்த விசாரணையும் தேவையில்லை என்று இன்று அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கி பாஜக எம்.பி.க்கள் பேசினார்கள்.

மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேள்விநேரத்தில் போது பேசுகையில், “ கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு ரஃபேல் போர்விமனக் கொள்முதல் விவகாரத்தில் அரசுமீது தவறான குற்றச்சாட்டு கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் “ என்றார். இதைக்கேட்டதும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதனால், அவை 40 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

‘ராகுல் காந்தி ஒரு பொய்ய’ர் என்று பாஜக எம்.பி.க்களும், ‘நாட்டின் காவல்காரர் ஒரு திருடர்’ என்று காங்கிரஸ் எம்.பி.க்களும் கோஷமிட்டனர்

மீண்டும் அவை கூடியபோது, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து பேசுகையில், “ ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, சர்வதேச அளவில் தேசத்தின் தோற்றத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிதைத்துவிட்டார். இப்போது நீதிமன்றம் அரசுக்கு நற்சான்று அளித்துவிட்டது. ஆதலால், இந்தத் தேசத்தின் முன் ராகுல் காந்தி அவையில் மன்னிப்பு கோர வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதேப்போன்று மாநிலங்களவையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, ரஃபேல் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்” என்றார்.

இது தவிர்த்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தக் கோரி வலியறுத்தி கோஷமிட்டனர், மற்றொருபக்கம், காவிரி மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். ஆந்திராவுக்கு சிறப்புஅந்தஸ்து கோரி தெலுங்குதேசம் எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். இதனால், அவையில் கூச்சலும் குழப்பமும் நீடித்ததால், அவையை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT