மறைந்த பிரதமர் வாஜ்பாய் நினைவை போற்றும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.
மறைந்த பிரதமர் வாஜ்பாய்க்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாயின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. அவரது உருவத்துக்கு கீழ் அவரது பெயர் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அருகில் வாஜ்பாய் வாழ்ந்த காலமான 1924-2018 என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் அசோக சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. சிங்கமுகம் கொண்ட அந்த சின்னத்தின் மத்தியில் “சத்தியமேவ ஜெயதே” என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் 100 ரூபாய் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
வாஜ்பாய் பிறந்த நாள், நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது நினைவைப் போற்றும் விதமாக சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் சுமிதா மஹாஜன், நிதியமைச்சர் அருண்ஜேட்லி, கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா, பாஜக தலைவர் அமித் ஷா, அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.