இந்தியா

காங். ஆதரவுடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி முயற்சி

செய்திப்பிரிவு

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்த் சிங் லவ்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளுமே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் மீண்டும் ஆதரவு அளிக்காது.

இந்தக் கட்சி பாஜகவின் ஒரு அங்கமாகவே செயல்படுகிறது. எங்களுடன் பேசுவதற்கு ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. ஷோஹிப் இக்பாலுக்கு அதிகாரம் அளித்தது யார்? நரேந்திர மோடியின் சாதனைகளை தம்பட்டம் அடிக்கும் பாஜக, தேர்தலை சந்திக்க அஞ்சுவது ஏன்?. இந்தப் பிரச்சினைக்கு சட்டசபை தேர்தலை மீண்டும் நடத்துவதுதான் தீர்வாக இருக்கும் என லவ்லி தெரிவித்தார்.

டெல்லியில் நிலவும் குடியரசு தலைவர் ஆட்சி குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு, “பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்க காங்கிரஸுடன் பேசி ஆம் ஆத்மிக்கு ஆதரவு பெற முயற்சி செய்து வருகிறேன்” என ஷோஹிப் இக்பால் கூறியிருந்தார்.

டெல்லியில் 49 நாள் ஆட்சி செய்த அர்விந்த் கேஜ்ரிவால், தனது கட்சியின் 11 எம்.எல்.ஏ.க்களை மாவட்ட வளர்ச்சி குழுக்களின் உறுப்பினர்களாக நியமித்தார்.

இதுகுறித்து, பாஜக டெல்லி மாநில தலைவர் சத்தீஷ் உபாத்யாய் கூறும்போது, “எங்களுக்கு ஒழுக்கம் கற்பிக்க முயலும் ஆம் ஆத்மி கட்சியினர், முதலில் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வது அவசியம். ராஜினாமா செய்த பின்பும் மாவட்ட வளர்ச்சி குழுக்களின் தலைவர்கள் என்ற பெயரில் அரசு அலுவலகம், கார் மற்றும் உதவியாளர்களின் வசதிகளை அனுபவித்து வருகிறார்கள். இதுதான் அவர்களின் ஒழுக்கமா?” என குற்றம் சாட்டி உள்ளார்.

SCROLL FOR NEXT