இந்தியா

அமைச்சரின் நாய்க் குட்டியை காணவில்லை தேடி அலைந்த ராஜஸ்தான் போலீஸ்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

பிடிஐ

குற்றவாளிகளை தேடி அலைவதற்குப் பதிலாக அமைச்சரின் காணாமல்போன நாயை தேடி போலீஸார் அலைந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடை பெற்றது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ராஜஸ்தான் மாநில பாஜக அரசின் சுகாதாரத்துறை அமைச்ச ராக இருப்பவர் ராஜேந்திர ரத்தோர். ஜெய்ப்பூரில் உள்ள இவரது பங்களாவில் வளர்க்கப் பட்ட 5 மாத நாய்க்குட்டி, கடந்த சனிக்கிழமை காணாமல்போனது. இது தொடர்பாக சோடாலா காவல் நிலையத்தில் புகார் தெரி விக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை முழுவதும் போலீஸார் பல்வேறு பகுதிகளில் நாய்க் குட்டியை தேடி அலைந்தனர். ஆனால், அதை கண்டுபிடிக்க முடியவில்லை.

நாயை விரைந்து கண்டு பிடிக்குமாறு காவல் துறை ஆணையரின் அலுவலகத்தி லிருந்து கண்டிப்பான உத்தரவு வந்ததையடுத்து போலீஸார் செய்வதறியாது திகைத்தனர். நாலாப்பக்கமும் தேடி அலைந்து கொண்டிருந்த நிலையில், அமைச்சரின் நாய்க்குட்டியை முதியவர் ஒருவர் நேற்று காலை அவரின் பங்களாவில் ஒப்படைத்தார். இதையடுத்தே போலீஸார் நிம்மதியடைந்தனர்.

இது தொடர்பாக அமைச்சரின் பங்களாவில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் கூறும்போது, “பங்களாவை விட்டு வெளியேறி சாலையில் திரிந்து கொண்டிருந்த நாய்க்குட்டியை, நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த முதியவர் ஒருவர் எடுத்துள்ளார். அந்த நாய்க்குட்டி யாருடையது எனத் தெரியாததால், விலங்குகள் நலக் காப்பகத்தில் விடுவதற்கு முடிவு செய்திருக்கிறார். அப்போது அமைச்சரின் நாய் காணாமல் போன தகவல் நாளிதழ்களில் வெளியானது. உடனே, அமைச்சரின் பங்களாவுக்கு வந்த அந்த முதியவர் நாயை ஒப்படைத்தார்” என்றார்.

கொலை, கொள்ளையை விசாரணை செய்ய வேண்டிய போலீஸார், ஒரு நாயை தேடி அலைந்து தமது நேரத்தை வீணாக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ் மாநில செய்தித்தொடர்பாளர் அர்ச்சனா சர்மா கூறும்போது, “கடந்த வெள்ளிக்கிழமை வைசாலி நகரில் உள்ள வீடொன்றில் 2 பேரை தாக்கி கொள்ளையடித்த கும்பல், அங்கிருந்த பெண்ணை பலாத் காரம் செய்துவிட்டு தப்பியோடி யுள்ளது.

அதே போன்று மற்றொரு பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. இவற்றை துப்புத்துலக்கி குற்ற வாளிகளை தேடும் பணியில் ஈடுபட வேண்டிய போலீஸார், நாயை தேடும் பணியில் ஈடு பட்டிருந்தது வெட்ககரமானது” என்றார்.

SCROLL FOR NEXT