நாட்டின் அரசியல் சூழல் கடினமாக இருப்பதால், அடுத்த பிரதமர் யாராக வருவார், இருப்பார் எனச் சொல்ல முடியாது என்று யோகா குரு பாபா ராம்தேவ் குழப்பத்துடன் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ள பாரத் ஸ்வாபிமான் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று மதுரைக்கு வந்திருந்தார். அப்போது பாபா ராம்தேவ் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது, அவரிடம், நாட்டில் அரசியல் சூழல், அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழல் மிகவும் குழப்பமாகவும், கணிக்க முடியாமல் கடினமாகவும் இருக்கிறது. ஆதலால், அடுத்து என்ன நடக்கும், தேர்தலில் யார் வெல்வார்கள் என்று இப்போது கூற இயலாது.
மக்களவைத் தேர்தலுக்கு பின், 2019-ம் ஆண்டு நாட்டில் யாருடைய தலைமையில் ஆட்சி அமையும், அடுத்த பிரதமர் யார், அல்லது பிரதமர் மோடியே 2-வது முறையாக வருவாரா என்பதை எளிதாகக் கூற இயலாது.
இந்தியா என்பது அனைத்து மதங்களும், பல்வேறு சமூக மக்களும் நிறைந்த நாடு. இதுமுழுமையான இந்து நாடு அல்ல. நமகுக்கு தேவை ஆன்மீக இந்தியா
நான் முழுமையான அரசியலில் கவனம் செலுத்தவும் இல்லை, வரும் தேர்தலில் யாரையும், எந்தக் கட்சியையும் ஆதரித்து பிரச்சாரமும் செய்யப்போவதில்லை.’’ என ராம்தேவ் தெரிவித்தார்.
சமீபத்தில் 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியில் இருந்த ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தச் சூழலில் பாபாராம் தேவ் இந்த கருத்தை கூறி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா வெளியேறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.