சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக கேரள சட்டப் பேரவையில் அமளி ஏற்பட்டது. இதனால் அவை 4-வது நாளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஆனால் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சபரிமலை, பம்பை, நிலக்கல் பகுதிகளில் 144 தடையுத்தரவை போலீஸார் அமல்படுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது நடைபெற்று வரும் சட்டப் பேரவைக் கூட்டத்திலும் எதி ரொலித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அவையில் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பி வருவதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கியதும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி யின் எம்எல்ஏக்கள் இது தொடர்பாக பேச முற்பட்டனர். ஆனால் இதற்கு அனுமதி மறுக் கப்பட்டதால் அவர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது அவையில் கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பியதால் அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. சபரிமலையில் 144 தடையுத்தரவை திரும்பப் பெறவேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
மேலும் ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், பேரவை வாயில் அருகே அமர்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியதால் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 4-வது நாளாக பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேரவை எதிர்க் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னி தலா கூறும்போது, “அவையை நடத்த விட முடியாமல் முதன் முதலாக ஒரு முதல்வர் அனைத்து எம்எல்ஏக்களையும் தூண்டி விட்டுள்ளார். நிலக்கல், பம்பை, சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதியை செய்து தரவேண்டும். சபரிமலையில் 144 தடையுத்தரவை வாபஸ் பெறவேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து பாஜக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை பேரவை வளாகத்தில் தொடங்கி யுள்ளனர்.
முன்னதாக கூச்சல், குழப்பத் துக்கு இடையே அவை நடந்த போது முதல்வர் பேசினார். அவர் பேசும்போது, “பத்திரிகை யாளர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தகுந்தபடி திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். விரைவில் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.