மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்றும் அதிமுக, திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையிலும் இந்த விவகாரத்தை தமிழக எம்.பி.,க்கள் எழுப்பினர்.
காவிரியின் நதியின் குறுக்கே, மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வரைவுத் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தமிழ அரசு வலியுறுத்தி வருகிறது. காவிரி ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பிரதிநிதிகளும் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே தமிழக எம்.பி.க்கள் காவிரி விவகாரத்தை இரு அவைகளிலும் எழுப்பி டும் அமளியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் இன்றும் மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள் மேகேதாட்டு விவகாரத்தை எழுப்பினர். கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது.
கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது, திமுக எம்.பி.க்களும் சேர்ந்து கோஷங்களை எழுப்பி அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளி ஏற்பட்டது.
இதுபோலவே ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி காங்கிரஸ் உறுப்பினர்களும் அவையில் அமளி செய்தனர். இதனால் அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது.
இதையடுத்து, அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார். இதுபோலவே மக்களவையிலும் மேகேதாட்டு பிரச்சினை எதிரொலித்தது. இதனால் இரண்டுமுறை அவை ஒத்தி வைக்கப்பட்டது.