புதுடெல்லி: சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் சிறந்த செவிலியர்களுக்கு தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அப்போது சென்னை அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் சங்கர் சண்முகம் உட்பட 15 பேருக்கு தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
செவிலியர் கல்வியில் 26 ஆண்டு கால சேவையை அங்கீகரிக்கும் வகையில் சங்கர் சண்முகத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவை சேர்ந்த கவிதா, கேரளாவை சேர்ந்த மஞ்சுமோல் உள்ளிட்டோரும் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது: கருணை, அர்ப்பணிப்பு உணர்வு, நாட்டிற்கு சேவையாற்றும் நோக்குடன் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சேவைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. நோயாளிகளைப் பராமரிப்பதில் தாய் உள்ளத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர். நைட்டிங்கேல் விருது பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன். இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசினார்.