ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாயக் கடனை முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்படி, காங்கிரஸ் கட்சி பொறுப் பேற்ற 2 நாட்களிலேயே ரூ.18 ஆயி ரம் கோடி விவசாயக் கடன் ரத்து செய் யப்பட்டுள்ளது. விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று நேற்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார். இதனால் அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடி செலவு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
அசாமில் ரூ.500 கோடி
அசாம் மாநிலத்தில் ரூ.500 கோடி விவசாய மானியத்தை பாஜக அரசு அறிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் முதல்வர் சர் பானந்த சோனோவால் தலைமையி லான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அசாம் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் மாநில பேரவை விவகாரத்துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி கூறும்போது, “ரூ.500 கோடி அளவுக்கு விவசாய மானியத்தை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் உள்ள 4 லட்சம் விவசாயிகள் பயன் அடைவர்.
விவசாயிகள் வாங்கியுள்ள கடனில் 25 சதவீத அளவுக்கு மானியம் வழங்கப் படும். அதாவது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை மானியம் தரப்படும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கிஸான் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்ற விவசாயிகளுக்கு இது பொருந்தும்
அடுத்த ஆண்டு முதல் விவசாயி களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப் படும். இதன்மூலம் 19 லட்சம் விவசாயி கள் பயன் அடைவர். இது விவசாய மானியம் மட்டுமே. விவசாயக் கடன் தள்ளுபடி கிடையாது. மேலும் இது தற்காலிகத் திட்டமேயாகும்” என்றார்.
குஜராத்தில் தள்ளுபடி
இதைப் போலவே குஜராத் மாநிலத் தில் ரூ.625 கோடிக்கு செலுத்தப்படாத மின் கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து குஜராத் மாநிலம் காந்தி நகரில் மாநில மின்துறை அமைச்சர் சவுரப் பட்டேல் நேற்று கூறும்போது, “கிராமப்புற பகுதிகளில் மின் கட்டணங்களைச் செலுத்தாததால் 6.20 லட்சம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதன்மூலம் அரசுக்கு ரூ.625 கோடி பாக்கித் தொகை இருந்தது. இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி இந்தத் தொகையானது தள்ளுபடி செய்யப்படுகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட குடும்பங்கள் ரூ.500 செலுத்தி மின் இணைப்பை மீண்டும் பெறலாம். வீடுகள், விவசாயிகள், கடை வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.
மின் கட்டண பாக்கித் தொகை, அபராதத் தொகை ஆகியவற்றை அவர்கள் செலுத்தத் தேவையில்லை. அவர்களின் அனைத்து மின் கட்டணத்தையும் முழுமையாக அரசு தள்ளுபடி செய்துள்ளது” என்றார்.
குஜராத்தில் இன்று ராஜ்கோட் மாவட்டம் ஜஸ்தான் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்தே இந்த மின் கட்டண தள்ளுபடி சலுகை அறிவிக் கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.