இந்தியா

இந்தியாவில் இருந்து தப்பியோடும் பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக பதுங்க முடியாது: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

செய்திப்பிரிவு

இந்தியாவில் இருந்து தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக பதுங்க முடியாது என்றும் அவர்கள் இந்தியா கொண்டுவரப்படுவார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஜாக்ரன் ஊடக குழுமம் சார்பில் நேற்று கருத்தரங் கம் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களைச் செய்துவிட்டு, இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளில் பதுங்கி உள்ளவர்கள் அந்த நாடுகளில் பாதுகாப்பாக இருக்க முடியாது. அவர்கள் இந்தியா கொண்டுவரப்படுவார்கள். அதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அர்ஜென்டினாவில் நடந்த ஜி20 நாடுகள் மாநாட்டின்போது, பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு இடம்தரக் கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு அந்த நாடுகளிடம் வலியுறுத்தப்பட்டது. இந்தியாவின் கோரிக்கைக்கு நல்ல முடிவு கிடைக்கும்.

நாட்டில் வறுமையை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரிய குடும்பப் பெயர்களுடன் ஆட்சிக்கு வந்தவர் கள், மக்களின் வறுமையைப் போக்க எந்த தீர்வையும் காணவில்லை. மக்களின் வறுமையை வைத்து அவர்கள் ஓட்டு வங்கி அரசியல் நடத்தினர். வறுமையை ஒழித்துவிட்டால் அதன்பிறகு எப்படி ‘வறுமையை ஒழிப்போம்’ என்று கோஷமிட முடியும். அது அவர்களின் ஓட்டு வங்கியை பாதிக்கும். எனவே, வறுமையை ஒழிப்பதில் அவர்கள் அக்கறை காட்டவில்லை.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வங்கிகளில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்து வெளிநாட்டில் இருக்கும் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ‘பெரிய குடும்பப் பெயர்களுடன் ஆட்சிக்கு வந்தவர்கள்’ என்று மோடி கூறியது காங்கிரசை அவர் மறைமுகமாக தாக்கிப் பேசியதாக கருதப்படுகிறது.

          
SCROLL FOR NEXT