இந்தியா

ஜம்மு காஷ்மீர் வெள்ளம்: மேலும் 60,000 பேர் மீட்பு

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீரில் மழை பெய்ததால் மீட்புப்பணிகள் ஞாயிற்றுக் கிழமை சற்றே பின்னடைவு கண்டது. ராணுவத்தினர் மேலும் 60,000 பேரை வெள்ளத்திலிருந்து மீட்டுள்ளனர்.

ஆனால் இன்னமும் 1 லட்சம் பேர் வெள்ளத்தினால் சூழ்ந்த பகுதிகளில் தவிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 8.30 மணியளவில் மழை கொட்டத் தொடங்கியது ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நின்றது. வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் இந்திய விமானப்படையின் நிவாரண விமானங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் அவசரகால மருந்துகள் வெள்ளப்பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

பிறகு காலை 11.15 மணியளவில் சகஜமான நிவாரண உதவிப்பணிகள் தொடங்கப்பட்டதாக ஐ.ஏ.எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்னும் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் பாதுகாப்பான கூரை கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இதுவரை 2 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 1.20 லட்சம் பேர் ராணுவத்தினரால் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு குடிநீர் பாட்டில்களும், உணவுப்பொட்டலங்களும் பெருமளவு அளிக்கப்பட்டு வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.

சுமார் 4 லட்சம் லிட்டர்கள் தண்ணீர், 131,500 உணவுப் பொட்டலங்கள், மற்றும் 800 டன்கள் சமைத்த உணவு ஆகியவை வினியோகிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் ராணுவத்தினர் 19 நிவாரண முகாம்களை அமைத்துள்ளனர்.

ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்சு என்ற இடம் வரை ராணுவத்தினரால் இதுவரை சீர் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT