இந்தியா

மோடியின் பொதுக்கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது கல்வீச்சு: காவலர் பலி; 15 பேர் கைது

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசம் காஜிப்பூரில் நேற்று நடந்த பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்துக்குச் சென்று திரும்பியவர்கள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த கல்வீச்சு தொடர்பாக ராஷ்ட்ரிய நிசாத் கட்சியைச் சேர்ந்த 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து காஜிப்பூர் போலீஸ் எஸ்.பி. யாஷ்வீர் சிங் கூறுகையில், “பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராஷ்ட்ரிய நிசாத் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கூட்டம் முடிந்து வந்தவர்கள் வந்த வாகனத்தை பல்வேறு இடங்களில் மறித்து, கல்வீசி நிசாத் கட்சியினர் தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் ஒருஇடத்தில் சாலையில் நிசாத் கட்சியினர் மறியலில் ஈடுபட்டபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்தப் போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்ய கர்முதின்பூரில் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சுரேஷ் வத்ஸ் (48) சென்றார். அப்போது போராட்டக்கார்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு சிகிச்கைக்காக கொண்டு சென்றோம். ஆனால், அவர் அங்குச் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். உயிரிழந்த கான்ஸ்டபிள் பிரதாப்கார்க் மாவட்டம், ராணிகாஞ்ச் நகரைச் சேர்ந்தவர்.

இந்த கல்வீச்சு தொடர்பாக இதுவரை ராஷ்ட்ரிய நிசாத் கட்சியைச் சேர்ந்த 15 பேரைக் கைது செய்துள்ளோம். அடையாளம் தெரியாத 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம் “ எனத் தெரிவித்தார்.

கல்வீச்சில் போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், அவரின் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், அவரின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் தனியாக வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி. ஆகியோர் விரைந்து செயல்பட்டு இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்களைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் புலந்த்சாஹர் மாவட்டத்தில் பசுக் கொலை தொடர்பாக ஏற்பட்ட வன்முறையைத் தடுக்கச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கும்பலால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நிசாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிசாத் கூறுகையில் “ எங்கள் கட்சியின் மீது அவப்பெயரை உண்டாக்க பாஜக முயல்கிறது. வன்முறையில் ஈடுபடும் கட்சி நிசாத் கட்சி அல்ல. பாஜகவினருக்கு எதிராக நாங்கள் அமைதியான முறையில் தர்ணா செய்யவே போலீஸாரிடம் அனுமதி கோரினோம். மறியலில் ஈடுபட்டபோது, உள்ளூர் மக்களும் பங்கேற்றார். அப்போது நடந்த கல்வீச்சில் போலீஸ் கான்ஸ்டபிள் காயமடைந்தார். ஆனால், எங்கள் கட்சியினர் வன்முறையில் ஈடுபடவில்லை” எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT