ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காமல்போக வாய்ப்பு இருப்பதால் முன்கூட்டியே அக்கட்சித் தலைவர்கள் சுயேச்சைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றர்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இதில் 199 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
முதல்வர் வசுந்தரா ராஜே அரசுக்கு எதிரான கடும் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் அங்கு வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே காங்கிரஸ் அங்கு முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக இரண்டாவது இடத்தில் உள்ளது.
எனினும் பெரும்பான்மை பெறுவதற்கு போதுமான இடங்கள் அக்கட்சிக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெரும்பான்மையான 101 இடங்களக்கு ஓரிரு இடங்கள் குறையவும் வாய்ப்புள்ளது. எனவே காங்கிரஸ் தலைவர்கள் முன்கூட்டியே சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறுகையில், ‘‘ராஜஸ்தான் மக்கள் எங்களுக்கு ஆசி வழங்கி உள்ளனர். பாஜகவின் அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் எதிராக வாக்களித்துள்ளனர். பெரும்பாலான பாஜக எம்எல்ஏக்கள் தோல்வியடைந்துள்ளனர். ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை நிச்சயம் பெறுவோம்.
ஆனாலும், பாஜகவுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகளை வரவேற்கிறோம். அவர்கள் எங்களுடன் தொடர்புகொண்டு பேசி வருகின்றனர்” என்றார்.