மத்தியப் பிரதேசத்தில் குதிரை பேரத்திற்கான முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இங்கு இரண்டாம் நிலையில் 109 தொகுதிகள் பெற்ற பாஜகவும் ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டுகிறது.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் ம.பி.யில் எந்தக் கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில், ஆட்சிக்குத் தேவையான 116-ல் காங்கிரஸுக்கு இரண்டு குறைவாக உள்ளது. பாஜகவிற்கு ஏழு தொகுதிகள் குறைகிறது.
இதர கட்சிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கு 2, சமாஜ்வாதி மற்றும் கோண்டுவானா கன்தந்திரக் கட்சிக்கு தலா ஒன்றும் கிடைத்துள்ளன. சுயேச்சைகளில் மூன்று பேருக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இந்நிலையில், முதல் இடம் பெற்ற காங்கிரஸ் சுயேச்சைகள் மூலமாக ஆட்சி அமைக்க விரும்புகிறது. பகுஜன் சமாஜ் உதவியை நாடினால், எதிர்காலத்தில் மாயாவதியில் மிரட்டலுக்கு ஆளாக நேரிடும் என காங்கிரஸ் அஞ்சுகிறது. இதேநிலை சமாஜ்வாதியிடமும் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.
உ.பி.யின் முன்னாள் முதல்வர்களான மாயாவதி மற்றும் அகிலேஷ் சிங் ஆகியோர் காங்கிரஸுக்கு ஆதரவளிக்கத் தயார் எனவும், பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். இதனிடையே, இரண்டாம் நிலையில் 109 தொகுதிகள் பெற்ற பாஜகவும் ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டுகிறது. இதற்கு பற்றாக்குறையாக உள்ள தொகுதிகளை சுயேச்சை மற்றும் இதர கட்சிகளின் வெற்றியாளர்களிடம் பேசி பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதனால், ம.பி.யில் குதிரை பேரம் நடைபெறும் வாய்ப்புகள் இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதற்கு, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளிடம் பாஜக இதுவரையும் நேரிடையாகப் பேசியதாகத் தெரியவில்லை.
இது குறித்து பாஜகவின் ம.பி.யின் முன்னாள் அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''எந்தக் கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால் பாஜகவிற்கு தோல்வி ஏற்பட்டதாகக் கருதமுடியாது. ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி ஆளுநரைச் சந்திப்போம். அப்போது ஆட்சி அமைத்து மெஜாரிட்டியை நிரூபிப்போம். பொறுத்திருந்து பாருங்கள்'' எனத் தெரிவித்தார்.
இதன் காரணமாக, ம.பி. அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் ம.பி.யின் ஆளுநராக அனந்திபென் பட்டேல் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் பிரதமராக நரேந்திர மோடி அமர்ந்த பின் குஜராத்தின் முதல்வராக இருந்தவர்.
நண்பகல் 12 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரைச் சந்திக்கச் செல்கின்றனர் அடுத்து பாஜகவும் ஆளுநரைச் சந்திக்க உள்ளது.