‘பெய்ட்டி’ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
‘பெய்ட்டி’ புயலால் கடலோர ஆந்திர மாவட்டங்களில் ரூ. 450 கோடிக்கு பயிர்கள் நாசமடைந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன. பலத்த மழை, புயல் காரணமாக 4 அல்லது 5 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் நாசமாயின. மேலும், பருத்தி, வாழை, சோளம், மிளகாய், தென்னை போன்றவை பெய்ட்டி புயலுக்கு இரையாகி விட்டன. நேற்று முன் தினம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா - ஏனாம் இடையே கரையைக் கடந்த பெய்ட்டி புயலால், ஆந்திர மாநிலத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
297 செல்போன் டவர்கள் நாசமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள், மரங்கள் சாலையில் சாய்ந்தன. இவற்றை சீரமைக்கும் பணி தற்போது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. சேதம் அடைந்த பகுதிகளை நேற்று ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். பின்னர் கிழக்கு கோதாவரி மாவட்டம், ஐ.போலாவரம் எனும் கிராமத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். வீடு இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படுமென முதல்வர் உறுதி அளித்தார். பின்னர் காக்கிநாடா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிக அளவிலான உயிர் சேதத்தையும், பிற சேதத்தையும் கட்டுப்படுத்தி உள்ளோம். தகவல் தொழில்நுட்ப உதவியால் முன்கூட்டியே புயல் கரையை கடக்கும் இடத்தை துல்லியமாகக் கணித்தோம். அதன்படி, அப்பகுதியில் உள்ள சுமார் 9 லட்சம் பேரின் செல்போன்களுக்கு தகவல்கள் அளிக்கப்பட்டது. மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
28 மீனவர்கள் மாயம்
புயல் கரையை கடந்ததும், சில மணி நேரத்தில் சாலைகள் சீரமைக்கப்பட்டன. மின்சாரம் நிறுத் தப்பட்ட இடங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டன. காணாமல் போன் 28 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் முழுமையாக விவசாய சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு தக்க நிதி உதவி செய்யப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.