இந்தியா

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஊழல் புகார்: காங்கிரஸ் மனு

பிடிஐ

கேரள முதல்வர் பினராயி விஜயன், வருவாய் துறை அமைச்சர் டி.பி. ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா நீதிமன்றத்தில் ஊழல் புகார் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் கண்ணனூர், பாலக்காடு, எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களில் மதுபான ஆலைகள் அமைப்பதற்குப் பல்வேறு நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்குவதென்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு முடிவு செய்தது. கேரள அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அந்த உரிமங்களைக் கேரள அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், அமைச்சரவையுடன் கலந்தாய்வு செய்யாமல் மதுபான ஆலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக,திருவனந்தபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.அஜித் குமாரை சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா சந்தித்தார். அப்போது,  கேரள முதல்வர் பினராயி விஜயன், வருவாய் துறை அமைச்சர் டி.பி. ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரி மனு வை நீதிபதியிடம் அவர் அளித்தார்.

அதன்பின் நிருபர்களிடம் ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:

கேரள முதல்வர் பினராயி விஜயனும், அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணனும், அமைச்சரவையுடன் கலந்தாலோசனை நடத்தாமலேயே, மாநிலத்தில் மதுபான தயாரிப்பு கூடங்கள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மதுபான ஆலை அமைக்க இருக்கும் நிலத்தில் போதிய தண்ணீர் ஆதாரம் இருக்கிறதா? என்று சுற்றுச்சூழல் ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை. இதேபோல், மதுபான ஆலைகள் அமைப்பதற்கான நிலமும் அடையாளம் காணப்படவில்லை.

ஆலைகள் அமைப்பதற்குச் சாதகமாக தயாரிக்கப்பட்ட அறிக்கை மீது ஆலோசனை நடத்தி, அது ஏற்கப்பட்டுள்ளது.

இதில் கிரிமினல் சதி நடந்துள்ளது. தனது பணியை நேர்மையாகச் செய்யாமல் இருப்பதற்கு லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கலால் துறை ஆணையர் ரிஷிராஜ் சிங்கையும் குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

இவ்வாறு ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பினராயி விஜயனுக்கு எதிராக 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி கேரள ஆளுநர் பி. சதாசிவத்திடமும் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனுவை பி. சதாசிவம் நிராகரித்து விட்டார்.

SCROLL FOR NEXT